மதுரை மாநகரில் வாக்குப்பதிவை கண்காணிக்க 300 சிசிடிவி கேமராக்கள்: தேர்தல் சிறப்பு டிஜிபி அசுதோஷ் சுக்லா

மதுரை மாநகரில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை காண்காணிக்க 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என தேர்தல் சிறப்பு காவல்துறை இயக்குநர் அசுதோஷ் சுக்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.


மதுரை மாநகரில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை காண்காணிக்க 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என தேர்தல் சிறப்பு காவல்துறை இயக்குநர் அசுதோஷ் சுக்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து சிறப்பு கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தேர்தல் சிறப்பு காவல்துறை இயக்குநர் அசுதோஷ் சுக்லா பேசியது: தென்மாவட்டங்களில் உள்ள 10 மக்களவை தொகுதிகள் மற்றும் 7 சட்டப்பேரவை தொகுதிகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 16,475 வாக்குச் சாவடிகள், 8,120 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இதில் 1,485 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில், மதுரை மக்களவை தொகுதியில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வாக்குப்பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு  சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற காவல்துறையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தென்மாவட்டங்களில் உள்ள 10 மக்களவை தொகுதிகள் மற்றும் 7 சட்டப்பேரவை தொகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குப்பதிவு மையங்களுக்கு 45 கம்பெனி மத்திய ஆயுத காவல் படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படவுள்ளனர். மேலும், அதிவிரைவுப்படை, 1,522 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரத்தில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த இடங்களில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியான முறையில் நடைபெற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 83 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3,917 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென் மண்டல காவல்துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் கபில்குமார் சரட்கர், ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் காமினி, திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜோசிநிர்மல் குமார், மதுரை  சரக காவல் துறை துணைத் தலைவர் பிரதீப் குமார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com