அரசு மருத்துவர்களின் வருகைப்பதிவு, பிரேதப்பரிசோதனை விடியோ பதிவுகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர்களின் வருகைப்பதிவு மற்றும் பிரேதப்பரிசோதனை விடியோ

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர்களின் வருகைப்பதிவு மற்றும் பிரேதப்பரிசோதனை விடியோ பதிவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைகளும் தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் செய்யப்பட வேண்டும். 
மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைகளை விடியோ பதிவு செய்ய வேண்டும் என 2008 ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த அருண் சுவாமிநாதன் மனுத்தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் நடக்கும் அனைத்து பிரேதப் பரிசோதனைகளையும் விடியோ பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. அவை சாத்தியமற்றது என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. 
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் கே.வனிதா, மூத்த தடயவியல் துறை அலுவலர் லோகநாதன் ஆஜராகினர். 
அப்போது லோகநாதன் அரசு மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், மருத்துவர்களின் வருகைப்பதிவுகள் முறையாக பின்பிற்றப்படுவது இல்லை எனவும் தெரிவித்தார். 
இதையடுத்து நீதிபதிகள் ஏப்ரல் 1 முதல் மருத்துவர்களின் வருகைப்பதிவுகள் மற்றும் பிரேதப்பரிசோதனை அறையில் எடுக்கப்பட்ட விடியோ பதிவுகள் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com