வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் வினோத்குமார், அனர்வாலா

மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் வினோத்குமார், அனர்வாலா மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
 மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மக்களவைக்கு உள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியே வாக்கு எண்ணும் அறைகளும், அதற்கு அருகிலேயே மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளன.
 அதேபோல, தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. மின்னணு இயந்திரம் பாதுகாக்கும் அறைகளுக்கு முன்பு துணை ராணுவத்தினரும்,  அடுத்ததாக  தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும்,  கல்லூரி வளாகம் மற்றும் நுழைவாயில் பகுதியில் மாநகரப் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
 வாக்கு எண்ணும் மையத்தை மதுரை மக்களவைத் தொகுதிக்கான பொது தேர்தல் பார்வையாளர்கள் வினோத்குமார், காவல் துறை பார்வையாளர் அனர்வாலா ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
 வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் அறையில் மேற்கொள்ளும் பணிகளை விரைந்து முடிக்கவும் தேர்தல் பார்வையாளர் வினோத்குமார் அறிவுறுத்தினார்.
 மாநகரக் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி ஆணையர் ச.விசாகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், மாநகரக் காவல் துணை ஆணையர் சசிமோகன் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com