தமிழ்நாடு பிரிமியர் லீக் வினாடி-வினாப் போட்டி: வேலம்மாள் பள்ளி அணி வெற்றி

தமிழ்நாடு பிரிமியர் லீக் மற்றும் வேலம்மாள் கல்விக்குழுமம் சார்பில் மாணவ, மாணவியருக்கான வினாடி-வினாப்

தமிழ்நாடு பிரிமியர் லீக் மற்றும் வேலம்மாள் கல்விக்குழுமம் சார்பில் மாணவ, மாணவியருக்கான வினாடி-வினாப் போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹக் புதன்கிழமை நடத்தினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தமிழகத்தில்  ஆண்டுதோறும் நடத்தப்படும் கிரிக்கெட் தொடராகும். கடந்த  2016 முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இத்தொடர், இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக்  போன்று தமிழகத்தில் மிக பிரபலமான கிரிக்கெட் தொடராகும். இந்நிலையில் மாணவ, மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் இருப்பதை போன்று கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்,  தமிழ்நாடு பிரீமியர் லீக் அமைப்பு, வேலம்மாள் கல்விக் குழுமத்துடன் இணைந்து மாணவ , மாணவியருக்கான வினாடி வினா போட்டிகளை நடத்தி வருகிறது. 
அதனடிப்படையில் மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் டின்பிஎல்  2019- க்கான வினாடி வினாப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. 
இப்போட்டியில்  திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, விரகனூர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, சென்னையில் உள்ள வேலம்மாள் சர்வதேசப் பள்ளி, சிவகங்கையில் உள்ள வேலம்மாள் போதி இருப்பிட பள்ளி,  வேலம்மாள் வித்யாலயா ஆகிய  பள்ளிகளின் சார்பில் அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் மூன்று மாணவர்கள் பங்கேற்றனர். வினாடி வினா  4 சுற்றுகளாக நடைபெற்றன. 
பிரபல வினாடி வினா நடத்துநர் அரவிந்த் போட்டிகளை நடத்தினார். போட்டிகளில் கிரிக்கெட் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து  கேள்விகள் கேட்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இறுதிச்சுற்று போட்டிகளை  ஆஸ்திரேலிய  கிரிக்கெட் வீரர் பிராட் ஹக்  நடத்தினார். இதில் மாணவ, மாணவியரிடம் கிரிக்கெட் தொடர்பான கேள்விகளை  கேட்டு பதிலளித்த அணிகளுக்கு மதிப்பெண் வழங்கினார். 
இப்போட்டியின் இறுதிச்சுற்றில் விரகனூர் வேலம்மாள் பள்ளி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. வேலம்மாள் சர்வதேசப் பள்ளி இரண்டாமிடமும், விரகனூர் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கிரிக்கெட் வீரர் பிராட் ஹக் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com