மீனாட்சிஅம்மன் கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயற்சி: சைவ நெறி மீட்புப் பேரவை, மருதிருவர் அமைப்பினர் 14 பேர் கைது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இருந்த மருதுபாண்டியர் சிலையை கண்டுபிடித்து

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இருந்த மருதுபாண்டியர் சிலையை கண்டுபிடித்து பெயர் பலகையை வைக்கக் கோரி கோயிலில் உள்ளிருப்பு போராட்டம்  நடத்த முயன்ற, மருதிருவர் மக்கள் கழகம் மற்றும் சைவ நெறி மீட்பு பேரவையினர் 14 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை மீனாட்சி  சுந்தரேசுவரர் கோயிலில் மருதுபாண்டியர் சிலை வைக்கப்பட்டு அதற்குரிய பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2010-இல் இருந்து மருதுபாண்டியர் பெயர்ப்பலகை காணப்படவில்லை. 
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது,  மருதுபாண்டியர் சிலை இருந்ததற்கான ஆவணம் எதுவும் கோயில் பட்டியலில் இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோயிலில் மாயமான மருதுபாண்டியர் சிலையை கண்டுபிடித்து பெயர்ப் பலகையுடன் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சைவ நெறி மீட்பு பேரவையினர்,  மருதிருவர் அமைப்பினர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தனர்.
இதையடுத்து கோயில் சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் மருதிருவர் மக்கள் கழக நிர்வாகி மருதுராஜா தலைமையில் கிழக்கு கோபுர பகுதியில் கூடிய அமைப்பினர் அங்கிருந்து அம்மன் சன்னதி வழியாக கோயிலுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் வழியிலேயே அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்து திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தினர். 
ஆனால் அமைப்பினர் போலீஸாரின் தடையை மீறி உள்ளே நுழைய முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தடையை மீறி கோயிலுக்குள் நுழைய முயன்ற 14 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com