அனுமதியின்றி தத்துக் கொடுக்கப்பட்ட சிறுவன் மீட்பு
By DIN | Published On : 22nd August 2019 07:59 AM | Last Updated : 22nd August 2019 07:59 AM | அ+அ அ- |

மதுரை அருகே உரிய அனுமதியின்றி தத்துக் கொடுக்கப்பட்ட சிறுவனை போலீஸார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணார்பட்டியைச் சேர்ந்தவர் ஜான்சிராணி. இவரது தம்பி ராஜகுரு மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த 2013- ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் அவரது குழந்தைகள் பர்வதராஜன், குருவிக்னேஷ்(13), இலக்கியா மற்றும் தன்யஸ்ரீ ஆகியோர் ஆதரவின்றி தவித்துள்ளனர். இதையடுத்து, ஜான்சிராணி, தம்பி குழந்தைகள் 4 பேரையும் கடச்சனேந்தலில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் 2013-ஆம் ஆண்டு சேர்த்துள்ளார்.
இந்நிலையில், பள்ளி நிர்வாகம், குருவிக்னேஷை உறவினர்களிடம் உரிய அனுமதி பெறாமலும், விதிமுறைகளை பின்பற்றாமல் தம்பதியருக்கு தத்துக்கொடுத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஜான்சிராணி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீஸார் கடச்சனேந்தலில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் விசாரணை நடத்தி, தத்துக்கொடுக்கப்பட்ட குருவிக்னேஷை விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மீட்டனர். இதைத் தொடர்ந்து குருவிக்னேஷை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் உறவினர் ஜான்சி ராணியிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தார்.
குருவிக்னேஷ் கிடைத்ததையடுத்து ஜான்சிராணி மற்றும் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனர்.