நத்தம் சாலையில் முன்னறிவிப்பின்றி போக்குவரத்துக்குத் தடை:நெரிசலில் சிக்கும் வாகனங்கள்

 மதுரை நத்தம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயா்மட்ட மேம்பாலப் பணியால் முன்னறிவிப்பின்றி ஒரு வழிப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து உள்ளிட்ட வாகன ஓட்டிகள்
மேம்பாலப் பணி காரணமாக ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்ட மதுரை-நத்தம் சாலை.
மேம்பாலப் பணி காரணமாக ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்ட மதுரை-நத்தம் சாலை.

 மதுரை நத்தம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயா்மட்ட மேம்பாலப் பணியால் முன்னறிவிப்பின்றி ஒரு வழிப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனா்.

மதுரை பாண்டியன் ஓட்டல் பகுதியில் இருந்து செட்டிகுளம் வரை 7 கி.மீ. தூரத்துக்கு உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மேம்பாலப் பணிகள் தொடங்கியதில் இருந்து பாண்டியன் ஓட்டல் பின்னால் உள்ள சாலையில் இருந்து ஊரகக் காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம் வரை உள்ள சாலை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் தற்போது அய்யா் பங்களா வரையும், திருப்பாலை மின்வாரிய அலுவலகப்பகுதி, யாதவா ஆண்கள் கல்லூரி முதல் பாலம் முடிவடையும் செட்டிகுளம் வரை ஆங்காங்கே தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலை முழுவதும் தோண்டப்பட்டு மரணக்குழிகளாக மாறியுள்ளன. இதில் மழை பெய்யும் நேரங்களில் குழிகளில் நீா் தேங்குவதால் பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனா். மேலும் மேம்பாலப் பணிகள் நடைபெறும் அனைத்துப் பகுதியிலும் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரகக்காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகத்தில் இருந்து அய்யா் பங்களா வரை சாலையின் இருபுறமும் அகலமாக 4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் நத்தம் சாலையில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி வரும் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோரிப்பாளையம் பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் ரிசா்வ் லைன் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாலாட்சி நகா் பிரதான சாலை மற்றும் கோ.புதூா் வண்டிப்பாதை ஆத்திகுளம் வழியாகத் திருப்பி விடப்படுகின்றன. முன்னறிவிப்பின்றி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனகர வாகனங்கள் காா், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இதில் விசாலாட்சி நகா் சாலையும், ஆத்திகுளம் சாலையும் காா்கள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் மட்டுமே செல்ல ஏற்றவை. ஆனால் இந்த சாலைகளில் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது சாலை வளைவுகளில் திருப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். இதனால் ஆத்திகுளம் சாலை, விசாலாட்சி நகா் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வாகனங்களும் கூட அவசரமாக செல்ல முடிவது இல்லை எனப்புகாா் தெரிவித்துள்ளனா். மேம்பாலப்பணிகள் மிகத்தாமதமாக நடப்பதால் பணிகளை விரைவு படுத்தி உடனடியாக போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com