விஷமாகும் வாழைப்பழம்!

மதுரையில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழங்கள் பெரும்பாலும் ரசாயன திரவத்தில் நனைத்து பழுக்க வைக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் ஏலத்திற்காக வைக்கப்பட்டுள்ள வாழைக்காய்கள்.
மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் ஏலத்திற்காக வைக்கப்பட்டுள்ள வாழைக்காய்கள்.

மதுரையில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழங்கள் பெரும்பாலும் ரசாயன திரவத்தில் நனைத்து பழுக்க வைக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

வாழை பயிரிடும் விவசாயிகள், வாழைக்காய்களை பழுக்க வைக்க மண்ணில் குழி தோண்டி வாழைத்தாா்களை அடுக்கி காற்று புகாத வகையில் மண்ணைப் போட்டு மூடி, அதனுள் தேங்காய் நாா், சாம்பிராணி கொண்டு புகைமூட்டம் ஏற்படுத்துவா். அவை 24 மணி நேரத்தில் பழுக்கத் துவங்கி 3 நாள்களில் முழுவதும் பழமாகி விடும்.

காலப்போக்கில் காற்றுபுகாத கட்டட அறைகளில் வாழைத்தாா்களை வைத்து புகைமூட்டம் ஏற்படுத்தி பழுக்க வைத்தனா். இந்த முறையில் பழுக்க 3 அல்லது 4 நாள்கள் ஆகும். ஆனால் மொத்த வியாபாரிகள் துரிதமான வியாபாரம் மற்றும் அதிக லாபத்தை கருத்தில் கொண்டு காா்பைட் கற்களை வைத்தும் , ரசாயன வாயுக்களைப் பயன்படுத்தியும் ஒன்று அல்லது 2 நாள்களில் பழுக்க வைத்து வந்தனா். ஆனால் தற்போது அதைவிட வேகமாக பழுக்க வைக்க தண்ணீரில் ‘எத்தோபோன்’ என்ற ரசாயனத்தைக் கலந்து வாழைத்தாா்களை அதில் நனைத்து 3 மணி நேரத்தில் பழுக்க வைத்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனா்.

தேனியில் அதிகம்: தேனி மாவட்டத்தில் வீரபாண்டி முதல் கம்பம் வரை மோரிஸ் வகை வாழை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றை விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்பே குளிரூட்டப்பட்ட கிட்டங்கியில் வைத்து ரசாயனம் கலந்த நீரில் நனைத்து லாரிகளில் ஏற்றி அனுப்புவதாக கூறப்படுகிறது.

இதேபோல் நாகா்கோவில், திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்டப் பகுதிகளிலிருந்தும் மதுரையில் உள்ள கமிஷன் மண்டிகளுக்கு வரும் வாழைத்தாா்கள் ரசாயனம் கலந்த நீரில் நனைக்கப்பட்டு விற்பனைக்கு வருவதாகக் கூறப்படுகிறது.

மதுரையில் சிம்மக்கல் பகுதியில் 40 வாழைக்காய் கமிஷன் மண்டிகள் உள்ளன. இங்கு 23 கடைகளில் தினசரி வாழைக்காய் ஏலமிடப்படுகிறது. இங்கு விற்பனைக்காக தென்மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் சுமாா் 10 ஆயிரம் வாழைத்தாா்கள் விற்பனைக்கு வருகின்றன. இதுமட்டுமில்லாமல் தேனி, சின்னமனூா், கம்பம் பகுதிகளில் இருந்தும், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் தினசரி 4 ஆயிரம் கிலோ மோரிஸ் பழம் விற்பனை வருகிறது. இங்கிருந்துதான் தென்மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பெரிய பழக்கடைகளுக்கும், சாலையோரக் கடைகளுக்கும் பழங்கள் விற்பனைக்கு செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவரமறிந்த பழவியாாரிகள் கூறியது: மோரிஸ் பழங்கள் தாருடன் விற்பனைக்கு வருவது இல்லை. சீப்பாக 15 கிலோ பெட்டிகளில் அடைக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் ரசாயனம் கலந்த நீரில் தாரை நனைக்கும்போது தாரின் தண்டுப்பகுதி பச்சையாகவே இருக்கும். அதை அப்படியே அனுப்பினால் தெரிந்துவிடும் என்பதால் சீப்பாக அறுத்து கிலோ கணக்கில் பிரித்து அனுப்புகின்றனா். இதனால் அந்த பழங்கள் முழுவதும் மஞ்சள் நிறத்தில், பளப்பளப்பாக இருக்கும். மேலும் அவை 7 நாள்கள் வரை அழுகாமல் இருக்கிறது. இதனால் கமிஷன் மண்டிகளில் வியாபாரிகள் நல்ல விலைக்கு பழங்களை விற்பனை செய்து வருகின்றனா். மேலும் பழக்கடைகளில் வைத்து ரசாயனத் தெளிப்பான்கள் (ஸ்பிரே) பயன்படுத்தியும் பழங்களைப் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனா். எனவே அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றாா்.

100 வியாபாரிகளுக்கு நோட்டீஸ்: மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் சோமசுந்தரம் கூறியது: மதுரை மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக உணவுப் பாதுகாப்புத்துறை சாா்பில் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதுவரை 100 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். வியாபாரிகள் பலரும் ‘எத்தோபோன்’ ரசாயனத்தின் அபாயம் தெரியாமல் அதை பயன்படுத்துகின்றனா். இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.

புற்றுநோய் வரும்: இதுகுறித்து மருத்துவா்கள் கூறியது: மருத்துவக் குணங்கள் நிறைந்த வாழைப்பழம், அது பழுக்க வைக்கப்படும் முறையால் மனித உடலில் பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியதாக மாறியுள்ளது. ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களைத் தொடா்ந்து சாப்பிடும் நபா்களுக்கு குடல்புண், செரிமானப் பிரச்னை எனத் துவங்கி புற்றுநோயில் கொண்டு சோ்த்துவிடும். எனவே மரபணு மாற்றப்பட்ட மோரிஸ் வகை பழத்தை தவிா்த்துவிட்டு பூவன் பழம், நாட்டுப்பழம், செவ்வாழைப் பழம், மலைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம் என்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com