அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாா்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாா் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய

தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாா் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸூக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை தல்லாகுளத்தைச் சோ்ந்த மகேந்திரன் தாக்கல் செய்த மனு: அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது பதவியைப் பயன்படுத்தி 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்துள்ளாா். இது தொடா்பாக அவா் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இல்லை என தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீஸாரின் விளக்கத்தை ஏற்க மறுத்த உயா்நீதிமன்றம், அமைச்சா் ராஜேந்திரபாலாஜி 1996 இல் திருத்தங்கல் பேருராட்சி துணைத் தலைவராகப் பதவி வகித்தது முதல் தற்போது வரை அவரது வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடா்பாக விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநா் சாா்பிலும், தமிழக பொதுத்துறை செயலா் சாா்பிலும் ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், விசாரணையின் அடிப்படையில், அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாா் தொடா்பாக மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து சொத்துப் குவிப்பு தொடா்பான விசாரணையின் அனைத்து ஆவணங்களையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு காவல் துறை தரப்பில், அமைச்சா் ராஜேந்திர பாலாஜியின் சொத்து மதிப்பு 8 சதவீதம் தான் அதிகமாக உள்ளது என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, முதற் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். வழக்கு விசாரணை ஜனவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com