திருப்பரங்குன்றம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 2 பேர் மட்டுமே பங்கேற்பு: அதிகாரிகள் புறக்கணிப்பு

திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள்

திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் 2 பேர் மட்டுமே பங்கேற்றனர். மேலும் பல்வேறு துறை அதிகாரிகளும் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர்.    
திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் சுரேஷ் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தங்கமீனா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தென்பழஞ்சியைச் சேர்ந்த சிவராமன், பாண்டி ஆகிய இரு விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியது: கடந்தமுறை வைக்கப்பட்ட கோரிக்கைகளான கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 
அதே சமயத்தில் தென்பழஞ்சி மாவிலிபட்டி வழியாக திருமங்கலத்திற்கு பேருந்து வசதியும், தென்பழஞ்சி அரசு பள்ளிக்கு குடிநீர் வசதியும் இன்னும் செய்து தரப்படவில்லை என்றனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் சுரேஷ் தெரிவித்தார். முன்னதாக வருவாய் ஆய்வாளர் தங்கபாண்டியன் வரவேற்றார். 
அதிகாரிகள் புறக்கணிப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்பேரில் மாதம்தோறும் 2 ஆவது செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த கூட்டமானது நாளடைவில் சம்பிரதாயத்துக்கு நடக்கும் கூட்டமாக மாறிவிட்டது. மேலும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படாததால் இதில் பங்கேற்க விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, போக்குவரத்து, பொதுப்பணித்துறை,, கூட்டுறவு உள்ளிட்ட எந்த துறை அதிகாரிகளும் பங்கேற்கவில்லை. இந்நிலை நீடித்தால் வரும் காலங்களில் இக் கூட்டத்தை அனைத்து விவசாயிகளும் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com