கிரானைட் முறைகேடு வழக்குகள் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு ஒத்திவைப்பு
By DIN | Published On : 14th February 2019 09:20 AM | Last Updated : 14th February 2019 09:20 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத கிரானைட் முறைகேடு தொடர்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்த 40 வழக்குகளை வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெவ்வேறு தேதிகளுக்கு ஒத்திவைத்து, மேலூர் நீதித்துறை நடுவர்மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கீழவளவு, கீழையூர், ரங்கசாமிபுரம், புதுத்தாமரைப்பட்டி, சிவலிங்கம், வரிச்சியூர், பூலாம்பட்டி, புதுத்தாமரைப்பட்டி, திருவாதவூர், இடையபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை பாசன குளங்கள், கால்வாய்கள், அரசுப் புறம்போக்கு நிலங்கள், ஊருணிகள் ஆகியவற்றில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டித் திருடப்பட்டன. அவைகளை பல்வேறு தனியார் நிலங்களில் பதுக்கிவைத்துள்ளனர்.
இந்நிலையில் அவற்றை அரசுடைமையாக்க அனுமதி கோரி, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் இல.சுப்பிரமணியன், 178 வழக்குகளை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இதில், 40 வழக்குகள் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அவற்றில் கீழவளவு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட கிரானைட் கற்கள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரபாபு ஆஜராகி சாட்சியமளித்தார். அரசு சிறப்பு வழக்குரைஞர் ஷீலாவும் விசாரணையின்போது ஆஜரானார்.
அதையடுத்து, வழக்குகள் மீதான விசாரணையை வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெவ்வேறு தேதிகளுக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் பழனிவேலு உத்தரவிட்டார்.