மதுரையில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு: 6 பேர் கைது": 85 பவுன் நகைகள் பறிமுதல்
By DIN | Published On : 05th January 2019 08:02 AM | Last Updated : 05th January 2019 08:02 AM | அ+அ அ- |

மதுரை நகரில் 30 நகை பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 6 பேரை தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, 85 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
மதுரை நகரில் தொடர்ந்து நகை பறிப்புச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களைப் பிடிக்க மாநகர காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சசிமோகன் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ஆனையூரைச் சேர்ந்த பிரகாஷ்( 28), சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ் (21), வண்டியூரைச் சேர்ந்த அஜித் என்ற சேவுகபெருமாள்( 23), கோ.புதூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற குட்டை கார்த்திக் (25), வில்லாபுரத்தைச் சேர்ந்த மொட்டை செல்வம்( 21), கமுதியைச் சேர்ந்த காளிமுத்து(24) ஆகிய 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து, 6 பேரையும் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
இதில் 6 பேர் கும்பல் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் 20 நகை பறிப்புச் சம்பவங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 10 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85 பவுன் நகைகள், 2 இரு சக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
24 பவுன் நகை திருட்டு: மதுரை கோச்சடையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி கண்ணம்மாள். இவர் தெற்குவாசல் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மாலையில் கோயிலுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது பின்கதவை உடைத்து பீரோவில் இருந்த 24 பவுன் நகைகளை அடையாளம்தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. கல்யாணசுந்தரம் அளித்தப்புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.