மதுரை மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு
By DIN | Published On : 02nd July 2019 08:12 AM | Last Updated : 02nd July 2019 08:12 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக த.சு.ராஜசேகர் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
மதுரை ஆட்சியராகப் பணியாற்றிய எஸ்.நாகராஜன், தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மைய இயக்குநராக ஜூன் 4 ஆம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பில் இருந்த எஸ்.சாந்தகுமார் வசம் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட த.சு.ராஜசேகர், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயலராகப் பணியாற்றினார். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் 1989-ஆம் ஆண்டில் குரூப் 1 அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். கடந்த 2006- இல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பதவி வழங்கப்பட்டது.
ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள இவர் மாநிலத் திட்டக் குழு, உலக வங்கியின் வறுமை ஒழிப்புத் திட்டம், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.