மாநில அளவிலான ஹாக்கி போட்டி: மதுரையைச் சேர்ந்த 3 அணிகள் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி
By DIN | Published On : 22nd July 2019 08:20 AM | Last Updated : 22nd July 2019 08:20 AM | அ+அ அ- |

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில், மதுரையைச் சேர்ந்த 3 அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றன.
மதுரை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், எம்ஜிஆர் விளையாட்டரங்கில் மாநில அளவிலான ஹாக்கி போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில், காவல் துறை முன்னாள் உதவி ஆணையர் சேது மாணிக்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, தெற்கு ரயில்வே, தமிழக காவல் துறை, மதுரை மாநகரக் காவல், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு விளையாட்டு விடுதி அணிகள் என தமிழகம் முழுவதும் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் நாள் போட்டிகளில், திருநகர் ஹாக்கி கிளப் - உடுமலைப்பேட்டை, வாடிப்பட்டி - பாளையங்கோட்டை, மதுரை விளையாட்டு விடுதி - திண்டுக்கல் ஹாக்கி கிளப், திருச்சி - கோவில்பட்டி ஆகிய அணிகள் மோதின. இதில், திருநகர், வாடிப்பட்டி, திருச்சி, மதுரை விளையாட்டு விடுதி ஆகிய 4 அணிகளும் வெற்றி பெற்று, இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இப் போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.