மானாவாரி பயிர்களில் பூச்சி, நோய் தாக்கத்தை "கோடை உழவு' கட்டுப்படுத்தும்

பருவமழை தொடங்குவதற்கு முன்பே கோடை உழவு செய்வதன் மூலம்  மானாவாரி பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.


பருவமழை தொடங்குவதற்கு முன்பே கோடை உழவு செய்வதன் மூலம்  மானாவாரி பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மானாவாரி பயிர்களாக சாகுபடி செய்யப்படும் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள் ஆகியன பூச்சி மற்றும் நோய் தாக்கத்துக்கு அதிகம் ஆளாகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க விதைப்புக்கு முன்பே அதாவது பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக கோடை உழவு செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளைக் கையாளுவதன் மூலமாக பூச்சி தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் காற்றோட்டம், நீர் சேமிக்கும் திறன் அதிகப்படுத்தப்படுகிறது. கூட்டுப் புழுக்கள் அழிக்கப்பட்டு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைகிறது. மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்வதற்கு நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின்கீழ் மானியம் வழங்கப்படுகிறது. 
நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் கடந்த 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாக, தற்போது கோடை உழவு செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.500 மானியம் வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது. விவசாயிகள் தங்களது பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள், வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி தங்களது வட்டாரம் இத் திட்டத்தின்கீழ் வருகிறதா என்பதை அறிந்து பயன்பெறலாம். மதுரை மாவட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் தொடர் நடவடிக்கையாக, தே.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, கள்ளிக்குடி ஆகிய 5 வட்டாரங்களில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. 
இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியது:
மதுரை மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ள 5 வட்டாரங்களிலும், கோடை உழவு செய்து மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். கடந்த ஆண்டில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் இருந்தது. இந்த படைப்புழு மக்காச்சோளத்தைத் தவிர இதர பயிர்களையும் தாக்கும் தன்மை உடையது. ஆகவே, கோடை உழவு செய்வதன் மூலம் படைப்புழுவின் கூட்டுப் புழுக்களை அழித்துவிட முடியும்.
படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்த மானாவாரி விவசாயிகள் கோடை உழவு மானியத் திட்டத்தைப்  பயன்படுத்திக் கொள்ளலாம்.  கோடை உழவு செய்து, அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் விதைப்பு செய்தல், விதை நேர்த்தி, வயல் ஓரங்களிலும் ஊடுபயிராகவும்,  தட்டை பயறு, ஆமணக்கு, சூரியகாந்தி, சாமந்திப் பூ விதைப்பது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றலாம். 
மேலும்  இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு விதை,  உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. சோளம், மக்காச்சோளம், கம்பு, குதிரைவாலி, பயறு வகைகள், பருத்தி சாகுபடி செய்யக் கூடிய விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com