ஊதியம் வழங்கக்கோரி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்
By DIN | Published On : 18th June 2019 07:10 AM | Last Updated : 18th June 2019 07:10 AM | அ+அ அ- |

மதுரையில் மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் கல்லூரி ஆசிரியர்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
மதுரை கே.கே.நகரில் உள்ளது அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியான இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், கல்லூரி திறக்கப்படும் முதல் நாளான திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பாலம் ஸ்டேசன் சாலையில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்துக்குச் சென்று அங்கு இணை இயக்குநரிடம் மனு அளித்தனர்.
போராட்டம் தொடர்பாக பேராசிரியர்கள் கூறும்போது, நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அனைவரும் அவதி அடைந்துள்ளோம். ஊதியம் வழங்கக் கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதையும் அமல்படுத்தவில்லை. எனவே போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என்றனர்.