நரசிங்கம்பட்டியில் ரூ.8.06 கோடியில் கூடுதல் துணை மின்நிலையம்
By DIN | Published On : 23rd June 2019 03:44 AM | Last Updated : 23rd June 2019 03:44 AM | அ+அ அ- |

மேலூர் அருகே மேலவளவு, திருவாதவூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் மின் அழுத்தக் குறைபாட்டை போக்கும் வகையில் நரசிங்கம்பட்டியில் கூடுதல் 110 கிலோ வாட் துணை மின்நிலையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
நரசிங்கம்பட்டி துணை மின்நிலையம் அருகில் ரூ.8.06 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு வந்தது. தமிழக அரசின் மின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த துணை மின்நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து மேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மின்நிலைய அலுவலகத்தில் மின் இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
மதுரை மின்பகிர்மானவட்ட செயற்பொறியாளர் இரா.கண்ணன், நிர்வாகப் பொறியாளர் பிரிதாபத்மனி ஆகியோர் கூட்டாக கூறுகையில், நரசிங்கம்பட்டியில் கூடுதல் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டதால் ரூ.22.11 லட்சம் மின் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. வடக்கில் மேலவளவு, கேசம்பட்டி முதல் தெற்கில் திருவாதவூர், பூஞ்சுத்தி வரை மிகப் பரந்த பரப்பளவில் அதிகமான கிராமங்கள் உள்ளடங்கிய பகுதியில் மின் விநியோகத்தை இந்நிலையம் பராமரித்து வந்தது. கூடுதல் துணை மின்நிலையம் நவீன நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளதால் கிராமங்களில் மின் அழுத்தக் குறைபாடு நீங்கும் என்றனர்.
இந்நிகழ்வில் மதுரை கிழக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் க.தமிழரசன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.