மாநகராட்சி குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தம்
By DIN | Published On : 24th June 2019 09:08 AM | Last Updated : 24th June 2019 09:08 AM | அ+அ அ- |

மதுரையில், மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மதுரை நகரில் 72 வார்டுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் விரிவாக்கம் செய்யப்பட்ட சில வார்டுகளுக்கு குழாய்கள் மூலமும், சில வார்டுகளுக்கு குடிநீர் வாகனங்கள் மூலமும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு மாநகராட்சி வாகனங்கள் மூலமாக இலவசமாக விநியோகிக்கப்படும் குடிநீர், தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், குடிநீர் விநியோகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து மாநகராட்சி குடிநீர் லாரிகளின் நடமாட்டத்தையும் விநியோகம் செய்யும் பகுதியையும் கண்டறிய மாநகராட்சி குடிநீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதன்படி மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகள், டிராக்டர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. இதன்மூலம் குடிநீர் லாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு செல்லாமல் வேறு வார்டுகளுக்கு சென்றாலும் அது கண்டுபிடிக்கப்படும்.
இதன் மூலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தில் முறைகேடுகள் ஏற்படுவது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.