முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீர் எடுப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

முல்லைப் பெரியாறு அணையில் குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரும் மாநகராட்சியின் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

முல்லைப் பெரியாறு அணையில் குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரும் மாநகராட்சியின் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
  மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் பா.குமாரவடிவேல், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜேஷ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய விளைபொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக சந்தைப்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.  ஆனால் அவற்றை கொள்முதல் செய்வதற்கு வேளாண் துறையினர் உதவி செய்ய வேண்டும் என்று விவசாயி தனுஷ்கோடி வலியுறுத்தினார்.  இதற்குப் பதில் அளித்த அதிகாரிகள்,  மதிப்புக் கூட்டப்பட்ட விளைபொருள்களுக்கு அக்மார்க் சான்று பெற வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால், கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றனர். 
 முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியபோது, விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏற்கெனவே, பெரியாறு பாசனப் பகுதிக்கு முழுமையாகத் தண்ணீர் கொடுக்க முடியாத நிலையில், புதிய குடிநீர்த் திட்டத்துக்கு நீர் எடுக்கப்பட்டால் பாசனம் மேலும் பாதிக்கும். ஆகவே, இத் திட்டத்தை கைவிட்டு மாற்றுத் திட்டத்தை ஆலோசிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், வைகையின் கிளை ஆறுகளான  பாம்பாறு, கல்லாறு, வராக நதி ஆகியவற்றில் நீர்வரத்து தடையின்றி வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பாண்டியன் வலியுறுத்தினார். 
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிசாமி பேசுகையில்,  அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைத் திறன் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. கரும்பு நிலுவைத் தொகை வழங்காதது, விவசாயிகளிடம் பதிவு செய்த கரும்புகளை உரிய காலத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளாதது போன்ற காரணங்களால் கரும்பு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த ஆண்டிலாவது அத்தகைய நிலை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்றார்.
 இதற்குப் பதில் அளித்த ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமார்,  ஆலையில் தற்போது இருப்பில் உள்ள சர்க்கரையை விற்பனை செய்து விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
நூறு நாள் வேலைத் திட்டத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையை, மேலூரில் உள்ள தேசிய வங்கி பயிர்க் கடன் நிலுவைத் தொகையில் வரவு வைத்துள்ளது என்று விவசாயத் தொழிலாளர்கள் முறையிட்டனர். அப்போது பதில் அளித்த முன்னோடி வங்கி மேலாளர்,  நூறு நாள் வேலைத் திட்டத்தின் சம்பளத் தொகையை உடனடியாக கணக்கில் செலுத்த வங்கிக்கு அறிவுறுத்துவதாகத் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக, விவசாய மின்இணைப்புக்காகப் பலரும் காத்திருக்கின்றனர். விவசாய மின்இணைப்பு வழங்குவதில் தற்போது உள்ள நடைமுறையை மாற்ற அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என விவசாயி திருப்பதி வலியுறுத்தினார்.  இதேபோல,விவசாயிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமார் தெரிவித்தார். 


விவசாயிகள் வெளிநடப்பு
கூட்டம் தொடங்கிய சற்று நேரத்தில்,  ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.சாந்தகுமார் வேறொரு அலுவல் காரணமாக செல்வதாக விவசாயிகளிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
அதையடுத்து, ஆட்சியர் இல்லாமல் இக் கூட்டம் நடைபெற வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே மதுரை மாவட்டத்துக்கு ஆட்சியர் நியமனம் செய்யப்படவில்லை. இதனால், எங்கள் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை இல்லை. பொறுப்பு வகிக்கும் ஆட்சியரும் சென்றுவிட்டால்,  குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஆட்சேபம் தெரிவித்து விவசாயிகள் பலரும் வெளிநடப்பு செய்தனர்.   
 பின்னர் அவர்களிடம் பேச்சு நடத்திய வேளாண் துறையினர், கூட்ட அரங்கிற்கு அவர்களை அழைத்து வந்தனர். ஆட்சியர் தனது பணியை முடித்துவிட்டு  வரும் வரை காத்திருக்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.  பின்னர் மீண்டும் அவர் வந்ததையடுத்து சுமார் ஒரு மணி நேர இடைவெளிக்குப் பிறகு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com