வேலை உறுதித் திட்டத்தை 150 நாள்களாக உயர்த்தக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

வேலை உறுதித் திட்டத்தை 150 நாள்களுக்கு உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய

வேலை உறுதித் திட்டத்தை 150 நாள்களுக்கு உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் மதுரையில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பி.இளங்கோவன், து.ராமமூர்த்தி, எம்.பாலுச்சாமி,  கே.மச்சராஜா, எம்.பச்சையப்பன், எம்.கார்த்திகைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி காரணமாக விவசாயப் பணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தை 150 நாள்களுக்கு வழங்க வேண்டும்.

  
நிர்ணயிக்கப்பட்ட நாள்களுக்கு தொழிலாளர்களுக்கு முழுமையாக வேலை அளிப்பதுடன், அவர்களுக்கான சம்பளத் தொகையை முறையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். குடிநீர்ப் பிரச்னையைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் மதுரை கிழக்கு மற்றும் மேற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
 இப் போராட்டம் குறித்து விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் கூறியது:
ஊரக வேலைஉறுதித் திட்டத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வறட்சியால் விவசாயப் பணிகள் இல்லாத நிலையில், இத் திட்டம்  தான் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. ஆகவே, இத் திட்டத்தை 150 நாள்களுக்கு உயர்த்த வேண்டும்.
மேலும் இத் திட்டத்தின் தொழிலாளர்களுக்கு நிர்ணயக்கப்பட்ட ரூ.229 சம்பளம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. அதில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றைக் களைய வேண்டும் என்றார்.
திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட துவரிமான், கொடிகுளம் பகுதியில் ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 100 நாள்கள் பணி தருவதற்கு பதிலாக 25 நாள்கள்தான் பணி வழங்குகின்றனராம். எனவே, தங்களுக்கு 100 நாள்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50 பேர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.   
தொடர்ந்து அவரிடம் ஊரக வேலை உறுதி திட்டத்தில் புதிதாக பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு மறுபதிவு செய்து வழங்கிட கோரிக்கை விடுத்தனர். 
மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் உறுதியளித்தார். கிராமத்தினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தாலுகா செயலர் முத்துராஜ் , மாவட்ட துணைச்செயலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com