மதுரையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4.50 லட்சம் பறிமுதல்

மதுரையில் 2 இடங்களில் வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.4.50 லட்சம் ரொக்கத்தை

மதுரையில் 2 இடங்களில் வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.4.50 லட்சம் ரொக்கத்தை தேர்தல் அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி மதுரை மாவட்டத்தில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதன்படி, சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பறக்கும் படையினர், வட்டாட்சியர் மலர்விழி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வாடிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது கோயம்புத்தூரிலிருந்து, மதுரை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் சோதனையிட்டபோது, அதில் முகைதீன் அப்பாஸ் என்பவரிடம் ரூ. 2.34 லட்சம் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உரிய ஆவணங்களை கொடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தை பெற்று செல்ல, முகைதீன் அப்பாஸுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல,  மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி அருகே நிலைக் கண்காணிப்புக் குழுவினர், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.  
ஞாயிற்றுக்கிழமை காலை அவ்வழியாக வந்த காரைச் சோதனையிட்டதில் ரூ.2.15 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால் தொகையை பறிமுதல் செய்தனர். 
 இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் முன்னிலையில் கருவூலத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பூவியாபாரிகளிடம் ரூ.2.86 லட்சம் பறிமுதல்: மேலூர்- திருப்பத்தூர் சாலையில் இ.மலம்பட்டி சோதனைச் சாவடியில் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த  சிறிய சரக்கு வாகனத்தைச் சோதனையிட்டனர். அதில் வந்தவர்களிடம் ரூ.2.86 லட்சம் ரொக்கம் இருந்தது.
மதுரை மாட்டுத்தாவணி பூச்சந்தையில் உள்ள பூக்கடையின் பணியாளர்களான அவர்கள்,  திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் பூ விற்பனை செய்ததற்கான தொகையை வசூலித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அத்தொகையை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com