மதுரையில் மூன்றாவது முறையாகக் களம் இறங்கும் அதிமுக

மதுரை மக்களவைத் தொகுதியில் முதல் வெற்றியைப் பெற்றுள்ள அதிமுக,  அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கோடு களம் இறங்குகிறது.

மதுரை மக்களவைத் தொகுதியில் முதல் வெற்றியைப் பெற்றுள்ள அதிமுக,  அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கோடு களம் இறங்குகிறது.
 இதுவரை மதுரை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 10 தேர்தல்களில் போட்டியிட்டு 8 முறை வெற்றி பெற்றிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 தேர்தல்களில் போட்டியிட்டு 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம், தமாகா ஆகியன தலா 2 தேர்தல்களில் போட்டியிட்டு தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 
திமுகவைப் பொருத்தவரை 1989, 1999, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் 2009 இல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 2009 இல் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.அழகிரி வெற்றி பெற்று மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதிமுக தொடங்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் 2014-க்கு முன்பு 2004 தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வந்தது. 2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. 2014-இல்  இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட அதிமுக, முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 
இந்த முறை அதிமுக அணியில் மக்களவைத் தேர்தலுக்கு பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா என வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் மதுரை தொகுதியைப் பெற கூட்டணிக் கட்சிகளான பாஜகவும், தேமுதிகவும் தீவிரமாக முயற்சி செய்தன. இருப்பினும் முதல் வெற்றியைப் பதிவு செய்த தொகுதி என்பதாலும், மிக முக்கியமான தொகுதியாகவும் கருதப்படுவதாலும் மதுரையை விட்டுக் கொடுக்க அதிமுக தயாராக இல்லை.
 தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. 
மற்ற 7 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. தென்மாவட்டங்களின் நுழைவாயில் மதுரை, துணை முதல்வரின் சொந்த தொகுதி தேனி, தென்எல்லையில் கட்சியின் பலத்தை தக்க வைக்க திருநெல்வேலி என 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளது.
மதுரை தொகுதியைப் பொருத்தவரை 2014 மக்களவைத் தேர்தலில் தற்போதைய அதிமுக மக்களவை உறுப்பினரான ஆர்.கோபாலகிருஷ்ணன் உள்பட 33 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக, திமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் தனித்துப் போட்டியிட  அதிமுக, திமுக, காங்கிரஸ்,  பாஜக கூட்டணியில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனைப் போட்டி நிலவியது.
இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.கோபாலகிருஷ்ணன் 4 லட்சத்து 54 ஆயிரத்து 167 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் வ.வேலுசாமி 2 லட்சத்து 56 ஆயிரத்து 731 வாக்குகள் பெற்றார்.
பாஜக அணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் டி.சிவமுத்துக்குமார் 1 லட்சத்து 47 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சியின் டி.என்.பாரத் நாச்சியப்பன் 32 ஆயிரத்து 143 வாக்குகள் பெற்றார். 
மதுரையில்  முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கோடு அதிமுக களம் இறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com