மதுரைஅருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
By DIN | Published On : 01st May 2019 07:34 AM | Last Updated : 01st May 2019 07:34 AM | அ+அ அ- |

மதுரை அருகே திங்கள்கிழமை "வெல்டிங்' பணியின் போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை சிந்தாமணி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயன்(40). இவர் "வெல்டராக' பணியாற்றி வந்தார். இந்நிலையில், சமயநல்லூர் அருகே ஏஐபிஇஏ காலனியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஜயன் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் விஜயனை பரிசோதித்த மருத்துவர்கள் முன்பே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி கலாவதியம்மாள், சமயநல்லூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டி பலி: உசிலம்பட்டி அருகேயுள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த மொக்கைச்சாமி மனைவி அமராவதி(61). இவர் செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டிலிருந்து தனது தோட்டத்தில் வேலை செய்யக் கிளம்பிச் சென்றுள்ளார். அப்பகுதியில் திங்கள்கிழமை இரவு வீசிய பலத்த காற்று காரணமாக அப்பகுதியில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை அமராவதி மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து செக்கானூரணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.