கன்னியாகுமரியில் நான்குவழிச்சாலை பணியை நிறுத்தக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளை அழித்து, அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளை அழித்து, அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணியை நிறுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் தாக்கல் செய்த மனு:
திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய கடந்த 2008 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஏற்கெனவே உள்ள சாலையை அகலப்படுத்தி, பலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், 2 தடங்களில் புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியானது.
இதன்படி, காரோடு - கன்னியாகுமரி இடையிலான 56 கிமீ தூரத்திற்கும், நாகர்கோவில் - காவல்கிணறு இடையிலான 16 கிமீ தூரத்திற்கும் புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கும்பணி நடந்து வருகிறது. 
இந்த தடங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்பட்ட 25 வருவாய் கிராமங்களில் உள்ள 76 நீர்நிலைகள் மற்றும் 368 கால்வாய்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த சுற்றுப்பகுதியின் நீராதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் நான்குவழிச்சாலை அமைக்கும் பகுதிகளில் 14 ஆயிரத்து 273 மரங்களை அகற்ற அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் இந்த பகுதிகளில் இருந்த சுமார் 1 லட்சத்து 69 ஆயிரத்து 415 மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். 
இந்த சாலை அமைக்கும் பணிக்காக சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. நீர்நிலைகளை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டிய அரசே, நீர்நிலைகளை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கெனவே உள்ள தடத்தில் நான்கு வழிச்சாலைக்கான பணிகளை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக நீர்நிலைகளை அழித்து, புதிதாக சாலை அமைக்கும் பணி ஏற்புடையது அல்ல. எனவே புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தவும், பணிகள் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், சாலை போக்குவரத்துத் துறை செயலர், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இயக்குநர், மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்ட இயக்குநர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com