"கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் இணைந்து பயணிக்க வேண்டும்'
By DIN | Published On : 15th May 2019 06:44 AM | Last Updated : 15th May 2019 06:44 AM | அ+அ அ- |

கல்வி நிறுவனங்களுடன் தொழில் நிறுவனங்கள் இணைந்து பயணித்தால் தான் மாணவர்களிடம் வேலைவாய்ப்பு குறித்த நம்பகத்தன்மை உருவாகும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் பேசினார்.
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 95 ஆவது ஆண்டின் 7 ஆவது செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செவ்வாய்க்கிழமை பேசியது:
மகாராஷ்டிரத்தில் உள்ள புணே பல்கலைக்கழக வளாகத்தினுள் எல்என்டி தொழிற்சாலை, குஜராத் பல்கலைக்கழக வளாகத்தினுள் பிலிப்ஸ் தொழிற்சாலை உள்ளன. இதேபோல பல்வேறு பல்கலைக் கழகங்களில் தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து பயணிக்கின்றன. இதேபோல தமிழகத்திலும் தொழிற்சாலைகள் மற்றும் கல்விநிறுவனங்கள் சேர்ந்து பயணிக்க வேண்டும். இது மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நாம் கற்கும் கல்வி மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். நாட்டில் 800 பல்கலைக்கழகங்கள், 35 ஆயிரம் கல்லூரிகள், 200- க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கூடங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் ஒன்றுகூட உலகில் அரங்கில் சிறந்த கல்வி நிறுவனமாக பெயர் வாங்கவில்லை. அதற்கு காரணம் அவர்கள் அளிக்கும் கல்வி சமூகத்தை சென்றடையவில்லை. பல நாடுகளில் ஆராய்ச்சி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தங்களின் கண்டுப்பிடிப்புகளுக்காக காப்புரிமை பெறுகின்றனர். ஆனால், இந்தியாவில் 500 காப்புரிமைகள் மட்டுமே வாங்கப்படுகின்றன. அதில் 50 கண்டுபிடிப்புகள் கூட மக்களை சென்றடையவில்லை. இந்தியாவில் 15 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்கின்றனர். ஏனென்றால், இங்கு உயர்கல்விக்கான நம்பகதன்மை குறைந்து வருகிறது. உயர்கல்வி கற்றால் வேலைவாய்ப்புகள் கிடைக்குமா என்ற எண்ணம் மாணவர்களிடத்தில் உள்ளது. கல்வி நிறுவனங்களுடன் தொழில் நிறுவனங்கள் இணைந்து பயணித்தால் தான் மாணவர்களிடம் வேலைவாய்ப்பு குறித்த நம்பகத் தன்மை உருவாகும் என்றார்.
இதில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், முதல்நிலை தலைவர் எஸ்.ரத்தினவேல், செயலர் ஜெ.செல்வம், பொருளாளர் ஆர்.பிரபாகரன், துணைத்தலைவர் டி.தனுஸ்கோடி உள்ளிட்டோர் பேசினர்.