வேகமில்லா கணினியை பயன்படுத்தி ஊதியத்தை தாமதப்படுத்த முயற்சி: அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
By DIN | Published On : 15th May 2019 06:44 AM | Last Updated : 15th May 2019 06:44 AM | அ+அ அ- |

தமிழகத்தில் வேகமில்லா கணினிகள் மூலம் ஊதியத்தை தாமதப்படுத்த முயற்சிப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஆ.செல்வம், மதுரை மாவட்டச் செயலர் க.நீதிராஜா, இணைச் செயலர் அ.பாலாஜி ஆகியோர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழக அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டம் மூலம் (ஐஎப்எச்ஆர்எம்எஸ்) இ-சர்வீஸ் ரிஜிஸ்டர், ஊதியப் பட்டியலில் உள்ள பிடித்தங்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமென சம்பளக் கணக்குத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணியை மே 14-ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், களநிலைமை முற்றிலும் வேறுமாதிரியாக உள்ளது. கணினி, வேகம் இல்லா இணையதள இணைப்பு, முழுமையான, முறையான பயிற்சி இல்லாமை, இணைய தளத்தில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டப் பக்கம் மாதிரி வடிவமாக இருப்பதால் அதில் பதிவேற்றம் என்பது நூறு சதவீதம் இயலாமல் உள்ளது. இது போன்று பல்வேறு சிக்கல்கள் இந்தத் திட்டத்தில் உள்ளது.
ஆனால், இந்த முறையை இந்த மாதமே அமல்படுத்தவேண்டுமென்று அரசு வற்புறுத்தியுள்ளது. இது அரசு ஊழியர்களின் ஊதியத்தை தாமதப்படுத்தும் நடவடிக்கையாகவே கருதுகிறோம்.
புதிய முறையை அமல்படுத்த போதுமான அளவு காலஅவகாசம் மற்றும் முறையான பயிற்சி போன்றவற்றை அளித்து திட்டத்துக்கானஅடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தி முழுமையான நிலையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்றனர்.