மின்சாதனங்களை பராமரிக்க கண்காணிப்புப் பொறியாளர் பணியிடம் ஏற்படுத்தக்கோரி மனு
By DIN | Published On : 16th May 2019 07:13 AM | Last Updated : 16th May 2019 07:13 AM | அ+அ அ- |

அரசு மருத்துவமனைகளில் மின்சாதனங்களை பராமரிக்க பொதுப்பணித்துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு தனியாக கண்காணிப்புப் பொறியாளர் பணியிடத்தை ஏற்படுத்தக்கோரிய மனுவை, மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான பொதுநல மனுக்களுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் தாக்கல் செய்த மனு:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின் தடையால் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகள் உயிரிழந்தனர். மின்தடை ஏற்பட்ட நேரத்தில் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்காமல் இருந்துள்ளது. இதுவே 5 நோயாளிகள் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவப் பணிகள் இடையூறு இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக பொதுப்பணித்துறையில் சென்னை, மதுரை, திருச்சி மண்டல அளவில் எலக்ட்ரிக்கல் பிரிவுக்கென தனியாகக் கண்காணிப்பு பொறியாளர் பணியிடம் 2011ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவு கண்காணிப்புப் பொறியாளர் பணியிடம் நீக்கப்பட்டு, அந்தப்பணியில் இருந்தவர்களை பொதுப்பணித்துறை நிர்வாகப் பிரிவில் இணைத்து இணை தலைமைப் பொறியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
தற்போது எலக்ட்ரிக்கல் பிரிவை கட்டடப் பொறியாளர்கள் தான் கவனிக்கின்றனர். அவர்களால் எலக்ட்ரிக்கல் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாது.
எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு தனி கண்காணிப்பு பொறியாளர் இருந்திருந்தால் அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது மின்சாதனங்களில் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொதுப்பணித்துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு தனி கண்காணிப்பு பொறியாளர் பணியிடத்தை ஏற்படுத்தி, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மின்னணு சாதனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யவும், அரசு மருத்துவமனைகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.தண்டபாணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 2 பொதுநல வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.