திருப்பரங்குன்றம் தொகுதியில் அனல் பறந்த பிரசாரம் நிறைவு
By DIN | Published On : 18th May 2019 06:51 AM | Last Updated : 18th May 2019 06:51 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை மாலை பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 37 பேர் போட்டியிடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டி திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே பிரசாரத்தை நிறைவு செய்தார். அவருடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்ட செயலர் வி.வி.ராஜன்செல்லப்பா, மக்களவை உறுப்பினர் மரகதம் குமாரவேல், இளைஞரணி மாவட்டச் செயலர் ரமேஷ், ஒன்றியச் செயலர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக வேட்பாளர் பா.சரவணன் தோப்பூரில் ஆரம்பித்து தனக்கன்குளம் வழியாக திருநகரில் பிரசாரத்தை நிறைவு செய்தார். அவருடன் நடிகர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி, மாவட்ட செயலர்கள் பி.மூர்த்தி, மு.மணிமாறன், பகுதிச் செயலர் உசிலை சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமமுக வேட்பாளர் இ.மகேந்திரன் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் கட்சியினரோடு பேரணியாக புறப்பட்டு திருப்பரங்குன்றம் கோயில் வாசல் வழியாக மீண்டும் 16 கால் மண்டபத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார். இலக்கிய அணி மாநிலச் செயலர் டேவிட் அண்ணாதுரை, ஒன்றிய செயலர் கே.கருத்தக்கண்ணன், மாவட்ட துணைச்செயலர் மனோகரன், பேரவை மாவட்ட செயலர் செல்வம், மகளிரணி மாவட்ட செயலர் சுமதிமதி, ஒன்றிய துணைச் செயலர் முத்துராஜா உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேல் சிலைமானில் பிரசாரத்தை தொடங்கி அவனியாபுரத்தில் நிறைவு செய்தார். அவருடன் நிர்வாகிகள் சவுரிராஜன், மணி, முனியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதி நாகமலை புதுக்கோட்டையில் பிரசாரத்தை தொடங்கி சிலைமான் புளியங்குளத்தில் நிறைவு செய்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல்ஹமீது, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், மண்டல செயலர் செங்கண்ணன், வடிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல சுயேச்சை வேட்பாளர்கள் வாகனம், ஜீப், வேன் , இருசக்கர வாகனங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தனர்.
அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்: அதிமுக சார்பில் இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது: மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்தபோதே எதிரிகள், துரோகிகளுக்கு தோல்வி உறுதியாகிவிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அமமுக பொதுச்செயலர் டி.டி.வி.தினகரனும் மறைமுக கூட்டாளிகள். மே 23 ஆம் தேதிக்குப் பிறகு திமுக கலகலத்துவிடும். டி.டி.வி.தினகரன் காணாமல் போவார் என்றார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு: அதிமுக மக்களோடு கூட்டணி அமைத்துள்ளது. இந்த ஆட்சியின் சாதனைகள் மக்களுக்கு தெரியும். மின்சார வெட்டு மட்டுமே திமுக ஆட்சியில் சாதனையாக இருந்தது. பல வாக்குறுதிகள் அளிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 5 முறை திமுக ஆட்சின்போது எதுவும் செய்யவில்லை என்றார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்: அதிமுகவின் தேர்தல் பணிகளைப் பார்த்து, தோல்வி பயத்தில் டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம் தொகுதியை 5 முறை சுற்றி வந்துள்ளார். மக்கள் ஏமாற மாட்டார்கள். திமுக ஆட்சியில் வீழ்ச்சி அடைந்து இருந்த மதுரை அதிமுக ஆட்சியில் வளர்ச்சி பெற்றுள்ளது என்றார்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்: திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை. தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் திமுக இருக்காது. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தல் இது என்றார்.
அதிமுக துணை அமைப்பாளர் கே.பி.முனுசாமி: இந்த தேர்தல் திருப்புமுனையை ஏற்படுத்தும். தற்போது இருக்கின்ற தலைவர்கள் சம காலத்தவர்கள். இதில் ஸ்டாலின் அவரது தந்தையால் பதவிக்கு வந்தவர். முதல்வரும், துணை முதல்வரும் உழைப்பால் உயர்ந்தவர்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் கட்சியின் மாநில தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன், இளைஞரணி மாவட்ட செயலர் ரமேஷ், ஒன்றிய செயலர் நிலையூர் முருகன், மாநில துணைச்செயலர் எம்.ஜி.பாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.