பெண் திடீர் மரணம்: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நடை அடைப்பு
By DIN | Published On : 18th May 2019 06:50 AM | Last Updated : 18th May 2019 06:50 AM | அ+அ அ- |

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்ததால், கோயில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை நடைபெற்றது.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த நீலகண்டன் மனைவி மகேஸ்வரி(55). இவர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளார்.
கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நின்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து திருக்கோயில் ஊழியர்கள் மகேஸ்வரியை மீட்க முயன்றபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுவாமி, அம்மன் சந்நிதியில் திரையிடப்பட்டு வழிபாடு நிறுத்தப்பட்டது.
மேலும் கோயிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். கோயில் காவல் நிலைய போலீஸார் மகேஸ்வரியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து திருக்கோயிலின் நடைகள் சாத்தப்பட்டன. மேலும் வெள்ளிக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் திருக்கோயிலில் கோயிலில் திருமணத்துக்காக காத்திருந்த மணமகன், மணமகள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
கோயிலுக்குள் ஆகம விதிகளின்படி பரிகார பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நடை திறக்கப்பட்டடு வைகாசி வசந்த உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து திருமணத்துக்காக கோயிலுக்கு வெளியே காத்திருந்தவர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.