கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி: தேசிய தகுதித்தேர்வுக்கான  பயிற்சி வகுப்பு மே 27இல் தொடக்கம்: "மூட்டா' சங்கம் அறிவிப்பு 

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மதுரையில் மே 27 இல் தொடங்க உள்ளது.

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மதுரையில் மே 27 இல் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்  வெள்ளிக்கிழமைக்குள் (மே 24) தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று "மூட்டா' சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் பணிக்கான  "நெட்'( தேசியத்தகுதித் தேர்வை) தேசிய தேர்வு முகமை ஆன்-லைன் மூலமாக ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜூன் 20-ஆம் தேதி முதல்  "நெட்' தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலைப் பாடப்பிரிவுகள், கணிப்பொறி அறிவியல்,  சுற்றுச்சூழல் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் உள்பட 81 பாடப்பிரிவுகளில் தேர்வு நடைபெற உள்ளது.  "நெட்' தகுதித் தேர்வில் முதுகலை இறுதி ஆண்டு மாணவர்களும் பங்கேற்கலாம்.  
"நெட்' தகுதித்தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாளில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித்திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். 3 மணி நேரம் நடைபெறும் ஆன்-லைன் தேர்வில் தாள் 1-இல் 50 "அப்ஜக்டிவ்' (கொள்குறி) வினாக்களும், தாள் 2-இல் 100 "அப்ஜக்டிவ்'  வினாக்களும் கேட்கப்படும். வினா ஒன்றுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 
 "நெட்' தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் கழித்தல்( நெகடிவ் மார்க்) கிடையாது. பொதுப்பிரிவினருக்கு குறைந்தபட்சம் 40 சதவிகிதம், இதரபிரிவினருக்கு 35 சதவிகிதம் என குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த "நெட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கல்லூரி ஆசிரியர்கள் சங்கமான "மூட்டா' சங்கம் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.  இதில் "மூட்டா'வின் 27-ஆவது "நெட்' தேர்வுக்கான மாலை நேர பயிற்சி வகுப்பு  மே 27-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 வரை நடைபெறுகிறது. 
 மதுரை காக்காத்தோப்புத் தெருவில் உள்ள "மூட்டா' அலுவலகத்தில் தினசரி மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் தங்கள் பெயர் மற்றும் பாடப்பிரிவை 94438-30200 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு மே 24-ஆம் தேதிக்குள் குறுஞ்செய்தி அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி கட்டணம் கிடையாது. பயிற்சி கையேடு மற்றும் பராமரிப்பு செலவுக்கான பங்களிப்புத் தொகை ரூ.500  மட்டும் செலுத்த வேண்டும். 
மேலும் கூடுதல் விவரங்களுக்கு பயிற்சி இயக்குநர் ஜி.சுரேஷ்குமார் 94438-30200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று "மூட்டா' சங்கம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com