வாக்கு எண்ணும் பணி நிறைவு: மதுரை மருத்துவக் கல்லூரியில் தூய்மைப் பணிகள் தீவிரம்

மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி முடிவடைந்ததை அடுத்து, மருத்துவக்

மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி முடிவடைந்ததை அடுத்து, மருத்துவக் கல்லூரியில் சுத்தப்படுத்தும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மதுரை வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்தியம், மேலூர் ஆகிய 6 தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணிக்காக, மருத்துவக் கல்லூரியின் வகுப்பறைகள் பயன்படுத்தப்பட்டன.
வாக்கு எண்ணிக்கைக்காக, வகுப்பறைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் மூங்கில்களாலான தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர், துணை ராணுவத்தினருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. இதனால், மருத்துவக் கல்லூரியின் 2 தளங்கள் மற்றும் வளாகங்கள் குப்பைகளால் நிரம்பி வழிந்தன.
வாக்கு எண்ணும் பணி வியாழக்கிழமை இரவு முடிவடைந்தது. அதையடுத்து,  மருத்துவக் கல்லூரியில் தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடங்கின. இதில், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
அதில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மூங்கில் கம்புகளை அகற்றி அறைகள் சுத்தப்படுத்தப்பட்டன. மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள்,  உணவுக் கழிவுகள், குப்பைகளால் நிரம்பி வழிந்த குப்பைத்தொட்டிகள் ஆகியன அகற்றப்பட்டு, குப்பை லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: மருத்துவக் கல்லூரியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களில் வாக்கு எண்ணும் பணி  நடைபெற்றது. இதை முழுவதும் சுத்தப்படுத்த 3 நாள்களாகும். தற்போது, ஷிப்டு முறையில் 150-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com