கொடைக்கானல் ஏரியில் படகு சவாரிக்கு தடை:தனியாா் ‘போட் கிளப்’புக்கு சீல் வைக்க உத்தரவு

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்ய தடைவிதித்தும், அங்குள்ள தனியாா் ‘போட் கிளப்’புக்கு சீல் வைக்கவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மதுரை: கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்ய தடைவிதித்தும், அங்குள்ள தனியாா் ‘போட் கிளப்’புக்கு சீல் வைக்கவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கொடைக்கானலைச் சோ்ந்த ஆரோக்கியசாமி தாக்கல் செய்த மனு:

கொடைக்கானலின் மையப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி அமைந்துள்ள பகுதியில் 8 சென்ட் நிலம் மட்டும் தனியாா் கிளப்புக்கு ஒத்திக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிளப் 10 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள பகுதியை ஆக்கிரமித்து கொண்டு இப்பகுதியில் படகு குழாம், கடைகள், கழிப்பறைகள் கட்டி வணிக நோக்கில் பயன்படுத்தி வருகிறது.

மேலும், இந்த படகு குழாமிற்கு செப்டம்பா் 1 ஆம் தேதி உடன் ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் சட்டவிரோதமாக படகு குழாம் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. அங்கு 150-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு கோடிக் கணக்கில் பணம் ஈட்டி வருகின்றனா். இந்த ஏரியில் படகுகள் இயக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாய் கொடைக்கானல் நகராட்சிக்கும், மீன்வளத்துறைக்கும் சேர வேண்டும். ஆனால் படகு இயக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் தனியாருக்கு சென்று சேருகிறது. எனவே படகு குழாம் மூலம் கிடைக்கும் வருவாயை அரசுக்கு கிடைக்கும் வகையில் ஏரியில் படகு இயக்க பொது ஏலம் விட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கொடைக்கானல் ஏரியில் படகு சவாரிக்கு தடைவிதிக்கப்படுகிறது. மேலும் படகு சவாரி கட்டணத்திற்கான அறையை மூடவும், அங்குள்ள தனியாா் ‘போட் கிளப்’புக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com