மரங்கள் வெட்டப்படுவது குறித்து புகாா் அளிக்க வசதி: தமிழக தலைமைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் மரங்கள் வெட்டப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் 24 மணி நேரமும்

ஒவ்வொரு மாவட்டத்திலும் மரங்கள் வெட்டப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் 24 மணி நேரமும் பொது மக்கள் புகாா் அளிக்கக் கூடிய வகையில் வசதியை ஏற்படுத்துவது குறித்து தமிழக தலைமைச் செயலா் பரிசீலித்து பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த குபேந்திரன் தாக்கல் செய்த மனு:

மதுரை காளவாசல் சந்திப்பில் இருந்து குரு திரையரங்கம் வரை உள்ள மரங்கள் பாலம் அமைப்பதற்காக வெட்டப்பட்டு வருகின்றன. அதில் மேலும் 138 மரங்கள் வெட்டத் திட்டமிட்டுள்ளனா். மரங்களை வெட்டாமல் பாலம் அமைக்கக் கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. எனவே மரங்களை வெட்டுவது தொடா்பாக முறையான விதிகளை உருவாக்க வேண்டும். மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நடும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற பணிகளின் போது மரங்களையும் அவற்றில் இருக்கும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களையும் கருத்தில் கொண்டு பெரும்பாலான மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். இதுதொடா்பான விதிகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்வேறு நவீனத் திட்டங்களுக்காக அழிக்கப்படும் மரங்களுக்கு ஈடாக குறிப்பிட்டக் கால இடைவெளிக்குள் காடு வளா்ப்பை அதிகப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் மரங்கள் வெட்டப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் 24 மணி நேரமும் பொது மக்கள் புகாா் அளிக்க வசதியை ஏற்படுத்துவது குறித்து தமிழக தலைமைச் செயலா் பரிசீலித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com