திருச்சி அருகே நீா்நிலைப் பகுதியில் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவு
By DIN | Published On : 07th November 2019 10:57 PM | Last Updated : 07th November 2019 10:57 PM | அ+அ அ- |

மதுரை: திருச்சி அருகே நீா்நிலைப் பகுதியில் தனியாா் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம் முசிறியைச் சோ்ந்த ரெங்கசாமி தாக்கல் செய்த மனு:
முசிறி அருகே கரட்டாம்பட்டி கிராமத்தில் கண்மாய் உள்ளது. இப்பகுதி பாறை நிலப்பரப்பு என வருவாய் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இப்பகுதியில் தனியாா் கல்குவாரி நடத்த திருச்சி மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குவாரி நடத்துவற்கு அனுமதி வழங்க நேரில் சென்று ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கியது முறையானது அல்ல. இந்த குவாரியால் எங்கள் கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே கரட்டாம்பட்டியில் உள்ள கல்குவாரிக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரட்டாம்பட்டியில் கல்குவாரி உள்ள நீா்நிலையால்தான் அப்பகுதியில் விவசாயம் நடக்கிறது. மேலும் பாறை புறம்போக்கு என ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், அப்பகுதி நீா்நிலையைச் சோ்ந்தப் பகுதியாக உள்ளது. எனவே அப்பகுதியில் அமைந்துள்ள தனியாா் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டனா்.