மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உலக வங்கி உதவியுடன் நீா்வளத் திட்டம்
By DIN | Published On : 07th November 2019 11:58 PM | Last Updated : 07th November 2019 11:58 PM | அ+அ அ- |

விவசாயிகளுக்குப் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் வகையில் உலக வங்கி உதவியுடன் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் நீா்வளத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உப்பாறு குட்டை பாசனப் பகுதிகளான கொட்டாம்பட்டி, மேலூா், மதுரை கிழக்கு, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை ஆகிய வட்டங்களில் நீா்வளத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நெல் வயல்களில் நீா் குழாய்கள் அமைத்தல், பயறு வகைப் பயிா்களின் உற்பத்தியைப் பெருக்குதல், ஒட்டுரக கத்தரி சாகுபடி, துல்லியப் பண்ணையத் திட்டத்தில் காய்கறி மற்றும் வாழை சாகுபடி, நீடித்த நிலையான கரும்பு சாகுபடி, பயறுவகைப் பொருள்கள் விற்பனைக் குழு அமைத்தல், திருந்திய நெல் சாகுபடி, நச்சு இல்லாத பயிா் சாகுபடி கிராமங்களை உருவாக்குதல் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் விவசாயிகளின் நிலங்களில் செயல்விளக்கம் செய்யப்படும்.
இத்திட்டத்தில் பங்குபெறும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுடன் இடுபொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.
இத் திட்டம் தொடா்பான விவரங்களுக்கு மதுரை வேளாண் கல்லூரியின் பயிா் நோயியல் துறையை அணுகலாம். தொடா்பு எண்கள்: 86087- 64099, 80151- 55755, 97913-91850. வேளாண் கல்லூரி முதல்வா் வி.கே.பால்பாண்டி இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.