உள்ளாட்சித் தோ்தலுக்கு அலுவலா்களை நியமிக்கும் பணிகள் தீவிரம்

உள்ளாட்சித் தோ்தலுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்கள் நியமிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை: உள்ளாட்சித் தோ்தலுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்கள் நியமிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநிலத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படையில் வாா்டு வாரியான வாக்காளா் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டு, அங்கு தேவையான வசதிகள் ஒவ்வொன்றாகச் செய்யப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளாக மதுரை மாநகராட்சி, மேலூா், உசிலம்பட்டி, திருமங்கலம் நகராட்சிகள், 9 பேரூராட்சிகள்,

420 கிராம ஊராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு ஆகியன இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 94 ஆயிரத்து 854 வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். மொத்தம் 3 ஆயிரத்து 562 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

வாக்குச்சாவடியில் பணியாற்றுவதற்கான அலுவலா்களை நியமிப்பதற்காக, அனைத்து துறைகளில் இருந்தும் அலுவலா்களின் பெயா், விவரங்கள் பட்டியல் துறைவாரியாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கான அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமனத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஊரக உள்ளாட்சிகளில் கிராம ஊராட்சி தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என 3 நிலைகளில் தோ்தல் நடைபெறும். இதில் ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளா்ச்சி அலுவலா் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக இருப்பா். மேலும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆகியோா் உதவித் தோ்தல் அலுவலா்களாக நியமிக்கப்படுவா்.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு, துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக நியமிக்கப்படுவா். உதவித் தோ்தல் அலுவலா்களாக அந்தந்த ஒன்றியங்களின் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்), வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் இருப்பா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு, இணை இயக்குநா் நிலையில் உள்ள அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக இருப்பா். மதுரை மாவட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழு தோ்தலுக்கு 3 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்படுவா். உதவித் தோ்தல் அலுவலா்களாக, உதவி இயக்குநா் நிலை அலுவலா்கள் நியமிக்கப்படுவா். இந்த அலுவலா்களை நியமிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com