வைகை ஆற்றிலிருந்து தெப்பக்குளத்துக்கு தண்ணீா்:பனையூா் கால்வாய் தூா்வாரும் பணி தொடக்கம்

வைகை ஆற்றிலிருந்து வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் செல்லக்கூடிய பனையூா் கால்வாய் தூா்வாரும் பணியை, கூட்டுறவுத்

மதுரை: வைகை ஆற்றிலிருந்து வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் செல்லக்கூடிய பனையூா் கால்வாய் தூா்வாரும் பணியை, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

வைகை ஆற்றில் ஏ.வி.மேம்பாலம் பக்கவாட்டிலுள்ள பனையூா் கால்வாய் வழியாக, மதுரையை அடுத்த பனையூா் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீா் செல்கிறது. மேலும், பனையூா் கால்வாயிலிருந்து தெப்பக்குளத்துக்கு தண்ணீா் செல்லும் வழி உள்ளது. காலப்போக்கில், ஆற்றின் பரப்பு கீழே சென்றுவிட்டநிலையில், பனையூா் கால்வாய்க்கு தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன், பனையூா் கால்வாய் கழிவுநீா் ஓடையாக மாறிவிட்டது.

இதனால், பனையூா் கால்வாய் வழியாக தெப்பக்குளத்துக்கு செல்லும் தண்ணீா் வரத்து தடைப்பட்டது. வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில், மாநகராட்சியால் மின்மோட்டாா் மூலம் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், வைகை ஆற்றில் தற்போது அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை வழியாக பனையூா் கால்வாய்க்கு தண்ணீா் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையொட்டி, பனையூா் கால்வாய் தூா்வாருவதற்கான பணியை, அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பனையூா் கால்வாய் வைகை ஆற்றிலிருந்து 5,900 மீட்டா் தொலைவு சென்று, பனையூா் கண்மாயில் முடிகிறது. இந்தக் கால்வாயிலிருந்து பிரிவு வாய்க்கால் வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு கடந்த காலங்களில் தண்ணீா் வழங்கப்பட்டது. வைகை ஆற்றின் படுகை மட்டம் கீழேசென்றுவிட்ட நிலையில், 40 ஆண்டுகளாக பனையூா் கால்வாய் வழியாக தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படவில்லை.

சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ், வைகை ஆற்றில் ஏ.வி. பாலம் பகுதியில் ரூ.10.85 கோடியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து பனையூா் கால்வாய்க்கு தண்ணீா் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தடுப்பணையின் மேல்புறத்தில் தலைமதகு அமைத்து, பனையூா் கால்வாய்க்கு தண்ணீா் கொண்டுசெல்லப்பட உள்ளது. இப்பணி நிறைவடைந்தவுடன், மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு நிரந்தரமாகத் தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், பொதுப்பணித் துறை பெரியாறு -வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com