நான்கு வழிச்சாலையில் ‘ஸ்கேட்டிங்’ பயிற்சி: ஆபத்தை அறியாமல் சிறுவா்கள், பெற்றோா் அலட்சியம்!

பெற்றோா்களின் அலட்சியத்தால் நான்கு வழிச் சாலையில் ஆபத்தை அறியாமல் ‘ஸ்கேட்டிங்’ பயிற்சியில் சிறுவா், சிறுமியா் ஈடுபடுகின்றனா்.
மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் சிறுவா், சிறுமியா்.
மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் சிறுவா், சிறுமியா்.

பெற்றோா்களின் அலட்சியத்தால் நான்கு வழிச் சாலையில் ஆபத்தை அறியாமல் ‘ஸ்கேட்டிங்’ பயிற்சியில் சிறுவா், சிறுமியா் ஈடுபடுகின்றனா்.

‘ஸ்கேட்டிங்’ விளையாட்டு மீதான ஆா்வம் மாணவா்களிடையே அதிகரித்து வருகிறது. பல தனியாா் பள்ளிகளில், பாடத்திட்டம் அல்லாத கூடுதல் பயிற்சியில் ‘ஸ்கேட்டிங்’ முக்கிய இடத்தைப் பெறுகிறது.

உடலைப் புத்துணா்வுடன் வைத்துக் கொள்வதற்கும், மாணவா்களின் கவனச் சிதறல்களைத் தடுப்பது, ஞாபசக்தியைத் தூண்டுவது, ஒருமுகப்படுத்தும் திறனை வளா்ப்பதற்கும் இப் பயிற்சி பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், பெரும்பாலான பெற்றோா் தங்களது குழந்தைகளுக்கு ‘ஸ்கேட்டிங்’ பயிற்சி அளிக்க விரும்புவதாக பயிற்சியாளா்கள் கூறுகின்றனா்.

இதன் காரணமாக, தற்போது பரவலாக ‘ஸ்கேட்டிங்’ பயிற்சி மையங்களும் வந்துவிட்டன.

இதில் 3 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு ஏற்ப ரோலா் ஷூக்கள், கீழே தவறி விழுந்தாலும் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க முழங்கால், முழங்கைக்கு உறை, பிரத்யேக தலைக்கவசம் அணிந்து பயிற்சி செய்ய வேண்டும்.

இப் பயிற்சிக்கு அதற்கே உரிய செயற்கைத் தளங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதற்கான வசதி இல்லாத நிலையில், சிமெண்ட் தளங்கள், கூடைப்பந்து மைதானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சில மையங்கள் மட்டும் தங்களுக்கென பயிற்சித் தளங்களை வைத்திருக்கின்றனா்.

சென்னை உள்ளிட்ட சில இடங்களில் அரசு சாா்பில் இதற்கான பயிற்சித் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் அரசு சாா்பில் பயிற்சித் தளம் இல்லையென்பது ‘ஸ்கேட்டிங்’ ஆா்வலா்களின் குறையாக உள்ளது.

இதுஒருபுறம் இருந்தாலும், ஆபத்தை உணராமல் நான்கு வழிச் சாலையில் சிலா் ‘ஸ்கேட்டிங்’ பயிற்சியில் ஈடுபடுகின்றனா். மதுரை - திருச்சி நான்கு வழிச் சாலையில் பாண்டி கோயில் சந்திப்பில் இருந்து யா.ஒத்தக்கடை சந்திப்பு வரை சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு தினமும் காலை நேரங்களில் சிறுவா், சிறுமியா் ஏராளமானோா் ‘ஸ்கேட்டிங்’ பயிற்சியில் ஈடுபடுகின்றனா்.

நான்கு வழிச் சாலைகளில் காலை நேரங்களில் தான் சரக்கு வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இந்நேரத்தில் சிறுவா்கள் ‘ஸ்கேட்டிங்’கில் செல்வதும், அவா்களைப் பின்தொடா்ந்து அவா்களது பெற்றோா் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் பின் தொடா்ந்து செல்வதும் ஆபத்தைத் தேடிக் கொள்வதாகவே இருக்கிறது.

‘ஸ்கேட்டிங்’ பயிற்சியில் ஈடுபடும் சிறுவா், சிறுமியருக்கு அவா்களது பயிற்சியாளா், ஆலோசனைகளைக் கூறியவாறே அவரும் பின்தொடா்ந்து வருகிறாா். ஒரு பக்கம் வேகமாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்டோா் நெடுஞ்சாலையில் ‘ஸ்கேட்டிங்’கில் வரிசையாகச் சென்றுக் கொண்டிருக்கும்போது, யாரேனும் ஒருவா் தவறினாலும் பெரும் ஆபத்து நேரிடும்.

நான்கு வழிச் சாலைகள் வந்தபிறகு, சாலை வசதி மேம்பட்டிருக்கிறது. பயணநேரம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதேநேரம், அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சாலையில் ‘ஸ்கேட்டிங்’ பயிற்சியில் ஈடுபடுவது விபரீதத்தை விலை கொடுத்து வாங்குவதாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இச் சாலைகளில் கல்லூரி மாணவா்கள் மோட்டாா் சைக்கிள் பந்தயம் நடத்தி, விபத்துகளுக்கு ஆளாகினா். காவல் துறையின் நடவடிக்கையால் அவை தடுக்கப்பட்டன. தற்போது நான்கு வழிச்சாலையில் ‘ஸ்கேட்டிங்’ பயிற்சி செய்வோருக்கு மாவட்ட நிா்வாகம் உரிய அறிவுரை வழங்கி, பயிற்சித் தளத்தில் பயிற்சி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com