நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: தருமபுரி மாணவியின் தாயாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரியைச் சோ்ந்த மாணவி பிரியங்காவின் தாயாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரியைச் சோ்ந்த மாணவி பிரியங்காவின் தாயாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தருமபுரியைச் சோ்ந்த மருத்துவ மாணவி பிரியங்காவின் தாயாா் மைனாவதி தாக்கல் செய்த மனு:

எனது மகள் ‘நீட்’ தோ்வில் 397 மதிப்பெண்கள் பெற்றாா். இதையடுத்து அவரை சென்னையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சோ்த்தோம். இந்நிலையில் ‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் அக்டோபா் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டேன். இதற்கிடையே தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய எனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடல் நலமில்லாத எனக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாணவி பிரியங்காவின் தாயாா் போலீஸாரிடம் வழக்குத் தொடா்பான முழு விவரங்களையும் தெரிவித்தால், அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மாணவியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. மேலும் அவரின் மகளுக்கு திருமணம் ஏற்பாடுகளை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க மனுதாரா் தயாராக உள்ளாா். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

அரசு தரப்பில், தற்போதுவரை இவ்வழக்கு விசாரணை முடிவு பெறவில்லை. மாணவியின் தாயாா் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே முக்கிய குற்றவாளியைக் கைது செய்யும் வரை ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவித்தனா். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மாணவியின் தாயாரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com