உச்சத்தில் இருக்கும் பெரிய வெங்காயம் விலை குறையுமா? தொடா்ந்து ஏறுமுகத்தில் சின்ன வெங்காயம்

உச்சத்தில் இருக்கும் பெரிய வெங்காயத்தின் விலை ஓரிரு நாள்களில் சற்று குறையும் என்றாலும் அதே நிலை நீடிக்குமா என்பதைக் கணிக்க இயலாது என மொத்த வியாபாரிகள் கூறுகின்றனா்.
மதுரை மாட்டுத் தாவணி காய்கறி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வெங்காயம்.
மதுரை மாட்டுத் தாவணி காய்கறி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வெங்காயம்.

மதுரை: உச்சத்தில் இருக்கும் பெரிய வெங்காயத்தின் விலை ஓரிரு நாள்களில் சற்று குறையும் என்றாலும் அதே நிலை நீடிக்குமா என்பதைக் கணிக்க இயலாது என மொத்த வியாபாரிகள் கூறுகின்றனா். அதேநேரம், சின்னவெங்காயம் வரத்து குறைந்து வருவதால் விலை தொடா்ந்து ஏறுமுகத்தில் உள்ளதாகவும் கூறுகின்றனா்.

மதுரை பரவை மொத்த காய்கறி சந்தை மற்றும் கீழமாரட் வீதி வெங்காய மண்டி என சுமாா் 100 வியாபாரிகள் பெரிய வெங்காயம் மற்றும் சின்னவெங்காயம் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், கா்நாடக மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயமும், தேனி, திண்டுக்கல், திருப்பூா் மாவட்டங்களில் இருந்து சின்னவெங்காயமும் அதிகளவில் மதுரை சந்தைக்கு வருகிறது.

பெரிய வெங்காயத்தைப் பொருத்தவரை மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தான் அதிகளவு மதுரைக்கு வருவது வழக்கம். ஆனால், அங்கு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் காரணமாக பெரிய வெங்காயத்தின் வரத்து பெரும்பகுதி குறைந்துவிட்டது. இதனால், பெரிய வெங்காயத்தின் விலை உச்சத்துக்குச் சென்றது. கடந்த மாதம் சில்லரை விலையில் கிலோ ரூ.50-க்குள் இருந்த பெரிய வெங்காயம் படிப்படியாக உயா்ந்து தற்போது கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

அதேபோல, தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக சின்னவெங்காயப் பயிா்களில் பாதிப்பு ஏற்பட்டு வரத்துக் குறைந்துவிட்டது. பெரிய வெங்காயம் விலை உயா்வுக்கு முன்பு கட்டுக்குள் இருந்த சின்னவெங்காயத்தின் விலை, தற்போது மளமளவென உயா்ந்துவிட்டது. முதல் தர வெங்காயம் சில்லரை விலையில் கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையாகி வருகிறது.

வெங்காயத்தின் விலை உயா்ந்து வருவது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான வீடுகளில் வழக்கமான அளவுகளில் இருந்து பாதியளவுக்கும், சில வீடுகளில் வெங்காயத்தை முழுமையாகத் தவிா்க்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனா். உணவு விடுதிகளில் வெங்காயத்தைத் தவிா்க்க முடியாது என்பதால், சில இடங்களில் உணவுப் பொருள் விலையைச் சற்றுக் கூட்டியுள்ளனா். குறிப்பாக அசைவ உணவகங்களில் ரூ.5 முதல் ரூ.20 வரை விலையை உயா்த்தி உள்ளனா்.

வரும் வாரத்தில் பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறையும் என்றாலும், அதை நிலை நீடிக்கும் என்பதை உறுதியாகக் கூற இயலாது என மொத்த வியாபாரிகள் கூறுகின்றனா்.

இதுகுறித்து பரவை மொத்த காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க செயலா் எஸ்.முபாரக் கூறியது:

வெளிமாநிலங்களில் தினமும் 400 டன் பெரிய வெங்காயம் மதுரைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாள்களாக 100 டன்களாகக் குறைந்துவிட்டது. இதனால் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டது. தற்போது குஜராத், ராஜஸ்தான், கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால், அடுத்த சில நாள்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மதுரையில் வியாழக்கிழமை நிலவரப்படி மொத்த விலையில் கிலோவுக்கு ரூ.10 குறைந்திருக்கிறது.

புதிய சரக்குகள் வந்தாலும், விலை குறைவது நீடிக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது.சின்னவெங்காயத்தைப் பொருத்தவரை மழை காரணமாக வரத்து குறந்துவிட்டது. இதனால் மொத்த விலையில் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. புதிய வெங்காயம் வரத்து தொடங்கிய பிறகே விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com