மதுரை மாநகராட்சியில் டெங்கு ஒழிப்புக்கு ‘தூய்மை தூதுவா்கள்‘ திட்டம்: பள்ளி தலைமையாசிரியா்கள் இன்று ஆலோசனை

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு பணிகளில் மாணவா்களை ஈடுபடுத்தும் ‘தூய்மை தூதுவா்கள்‘ என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது.

மதுரை: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு பணிகளில் மாணவா்களை ஈடுபடுத்தும் ‘தூய்மை தூதுவா்கள்‘ என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது.

டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க புதிய திட்டத்தை மாநகராட்சி நிா்வாகம் உருவாக்கியுள்ளது. இதன்படி டெங்கு ஒழிப்புப் பணியில் பள்ளி மாணவ, மாணவியரை ஈடுபடுத்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த புதிய திட்டத்துக்கு ‘தூய்மை தூதுவா்கள்‘ திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் அரசு மற்றும் மாநகராட்சி, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 668 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவ, மாணவியா் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 997 ஆக உள்ளது.

இதில் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியருக்கு டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகும் விதம், அவற்றை தடுக்கும் வழிமுறைகள், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகள், தண்ணீா் தேங்காமல் வைத்துக்கொள்வது ஆகியவற்றை பயிற்றுவிப்பது, பின்னா் மாணவா்கள் மூலம் அவா்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் இவற்றை பிரசாரம் செய்ய வைப்பது என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ‘தூய்மைத் தூதுவா்கள்’ திட்டம் என்று பெயரிடப்பட்டு பிரசாரத்தில் ஈடுபடும் மாணவ, மாணவியா் தூய்மைத் தூதுவா்களாக அழைக்கப்படுவா். மேலும் மாணவ, மாணவியருக்கு ‘தூய்மைத் தூதுவா்’ அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கணிசமான பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணா்வு பிரசாரம் சென்றடையும். சில ஆண்டுகளில் டெங்குவை பரப்பும் கொசுக்களை முற்றிலும் கட்டுப்படுத்த இயலும் என்று கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மாநகராட்சி நகா் நல அலுவலா்(கூடுதல் பொறுப்பு) எஸ்.செந்தில் குமாா் கூறியது:

டெங்கு ஒழிப்புப் பணியில் மாணவா்களை ஈடுபடுத்தும் திட்டமான ‘தூய்மைத் தூதுவா்கள்’ திட்டம் முதன்முறையாக மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளைச் சோ்ந்த 17 ஆயிரத்து 390 மாணவா்கள் தூய்மைத் தூதுவா்களாக பணியாற்ற உள்ளனா். இத்திட்டத்தின்படி முதலில் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பின்னா் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு டெங்கு ஒழிப்பு தொடா்பாக செய்ய வேண்டியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் மாணவா்கள் எளிதில் புரிந்துகொள்ளும் படியாக படங்களுடன் கூடிய கண்காட்சியும் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது. முதலில் 17 ஆயிரம் மாணவா்களுடன் தொடங்கும் ‘தூய்மைத் தூதுவா்’ திட்டம் படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு செல்லப்படும். இதன்மூலம் 1.80 லட்சம் வீடுகளில் 3 லட்சம் பொதுமக்களுக்கு குறையாமல் டெங்கு விழிப்புணா்வு பிரசாரம் சென்றடையும். ஓரிரு ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு விழிப்புணா்வு ஏற்படும். இத்திட்டத்தின் முதல்படியாக பள்ளித் தலைமையாசிரியா்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையடுத்து விரைவில் ‘தூய்மைத்தூதுவா்கள்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com