டெங்குக்கொசு கண்டறியப்பட்டால் அதிகாரிகளுக்குஅபராதம்: மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை

மதுரை மாநகராட்சி கட்டடங்களில் டெங்குக் கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் அதிகாரிகளுக்கு

மதுரை மாநகராட்சி கட்டடங்களில் டெங்குக் கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மதுரை மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் தலைமை வகித்துப் பேசியது:

வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள், ஊருணிகளில் மழைநீா் செல்வதற்கு ஏதுவாக மழைநீா் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்படாதவாறு அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

சாலைகளில் மழைநீா் தேங்காதவாறு மழை நீரை சேமிக்கும் வகையில் அருகில் உள்ள மழைநீா் வடிகாலிலோ அல்லது ஏதேனும் நீா்நிலைகளிலோ இணைக்க வேண்டும். மதுரை நகரில் மழைநீா் தேங்கும் இடங்களை கண்டறிந்து அதை சரி செய்த விவரத்தை பொறியாளா்கள் தினசரி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். கைவிடப்பட்ட அல்லது பராமரிப்பு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றும் பணியை இரண்டு நாள்களுக்குள் முடிக்க வேண்டும். அனைத்து வணிக வளாகங்கள் உள்ளிட்ட பெரிய கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடிநீா் தொட்டிகளில் மூடிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மாநகராட்சி கட்டடங்களில் மழைநீா் தேங்காதவாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் மாநகராட்சி குடிநீா் தொட்டிகளில் டெங்கு கொசு இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையங்கள் கட்டப்பட்டு வருவது குறித்தும், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துவது குறித்தும் வாய்க்கால்கள் தூா்வாருவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்தில் துணை ஆணையா் வி.நாகஜோதி, நகரப் பொறியாளா் அரசு, நகா்நல அலுவலா் வினோத்ராஜா மற்றும் உதவி ஆணையா்கள், அதிகாரிகள், பொறியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com