பெரு நிறுவன வரி, ஜிஎஸ்டி மாற்றங்களுக்கு தொழில், வணிக அமைப்புகள் வரவேற்பு

பெரு நிறுவன வரி குறைப்பு, ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதற்கு, தொழில், வணிக அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.


பெரு நிறுவன வரி குறைப்பு, ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதற்கு, தொழில், வணிக அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேலு, தலைவர் என். ஜெகதீசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் உள்ள குறைகள் நிதி அமைச்சரின் அறிவிப்பு மூலமாக சரிசெய்யப்பட்டுள்ளன. உலகளவில் பெரு நிறுவனங்களுக்கான மிகக் குறைந்த வரி விகிதம் உள்ள நாடு இந்தியா என்ற மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தியிருப்பதன் மூலமாக, தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்பது உறுதி.
அத்துடன், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில்  கூட்டத்தில், தொழில் வணிகத் துறையினரின் பல கோரிக்கைகளை ஏற்று, ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதும் பாராட்டுக்குரியது.நுகர்பொருள் வணிகத்தை பாதிக்கும் வகையில், அவ்வணிகத்தில் வழக்கத்திலிருந்த விற்பனைக்குப் பிறகு வழங்கப்படும் தள்ளுபடி குறித்த குழப்பமான சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு, நுகர்பொருள் வணிகத் துறையினருக்கு பெரும் நிவாரணம் அளிப்பதாக உள்ளது.
அதேபோல், பொறியியல் தொழிற்சாலைகளில் கூலி வேலை சேவைக்கான வரியை 
12 சதவீதமாகக் குறைத்திருப்பது மற்றும் தானியங்கள், பயறு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் சார்ந்த பொருள்களுக்கு வரிவிலக்கு அளித்திருப்பதும் வரவேற்புக்குரியது.
தொழில் வணிகத் துறையினரின் பல்வேறு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அதில் பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. வரும் காலத்திலும் இப்போக்கு நீடிக்க வேண்டும். அதன்மூலம், மிகச் சிறந்த வரி முறையான ஜிஎஸ்டி அமலாக்கத்தில் உள்ள குழப்பங்களைத் தீர்க்க முடியும். வரி வருவாயையும் அதிகரிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்திய பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருக்கின்றன. புளி, பொரிகடலைக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. 
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை காரணமாக,  குளிர்பானங்கள் தயாரிப்பில் உள்ள நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு பாதகமான சூழல் இருந்தது. தற்போது, ஐஸ்கிரீமுக்கு இருப்பதைப் போல குளிர்பானங்களும் தனி பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டு, ஒரே மாதிரியான வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
அதேபோல், ரூ. 2 கோடி வரை வணிகம் செய்பவர்களுக்கு படிவங்கள் (9, 9-ஏ, 9-சி) தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ரூ. 2 கோடிக்கு மேல் வணிகம் செய்பவர்கள் ஏற்கெனவே மாதாந்திர படிவங்கள் தாக்கல் செய்தபோது ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
இருப்பினும், பிஸ்கட், வத்தல் போன்ற பொருள்களுக்கு வரிகுறைப்பு, நிவாரணம் அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே, அடுத்த கவுன்சில் 
கூட்டத்துக்கு முன்பு வணிகர்களை அழைத்துப் பேசி, முழுமையான தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com