குடியிருப்புப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு

குடியிருப்புப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தும் பெண்களை

குடியிருப்புப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தும் பெண்களை மாநகராட்சி அலுவலர்கள் மிரட்டுவதாக குறைதீர் கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலஅனுப்பானடியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், மாநகராட்சி அலுவலர்கள் மீது புகார் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறியது: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட மேலஅனுப்பானடியில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
இப் பகுதியில் 500-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலஅனுப்பானடியில் அடிப்படை வசதிகள் இல்லாமல், சுகாதாரமற்ற நிலையில் பல்வேறு தொற்றுநோய், காய்ச்சல் ஏற்பட்டு குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைத்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், மாநகராட்சி அலுவலர்களிடம் பெண்கள் முறையிடச் சென்றால், போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி காவல் துறையினர் மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடியில் நடந்ததைப் போல துப்பாக்கிச் சூடு  நடத்தப்படும் என்றும் மிரட்டுகின்றனர்.
ஆகவே, மேலஅனுப்பானடியில் குடியிருப்புப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைப்பதைத் தவிர்த்து வேறு இடத்துக்கு மாற்றுவதோடு, புகார் கொடுக்கச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களை மிரட்டும் மாநகராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com