அனைத்து மாவட்டங்களுக்கும் பேரிடர் மேலாண்மை செயல் திட்டம் : வருவாய்த் துறை அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் பேரிடர் மேலாண்மை செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, இயற்கைப் பேரிடர்களால் பாதிப்புகள் அதிகம் ஏற்படக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் பேரிடர் மேலாண்மை செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, இயற்கைப் பேரிடர்களால் பாதிப்புகள் அதிகம் ஏற்படக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
 வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மதுரை மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய தாவது:
வடகிழக்குப் பருவமழை காலத்தில் கனமழையால் வெள்ளம் ஏற்படும் சூழலில் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதைக் காட்டிலும், முன்னெச்சரிக்கையாக செயல்படுவதால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். புயல், வெள்ளம் போன்ற இடர்பாடுகளின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில் முன்னேற்பாடு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.ப்
தமிழகத்தில் தாழ்வான பகுதிகளாக 4,339 இடங்கள் கண்டறிப்பட்டுள்ளன. இவை பாதிப்பு அடிப்படையில் 4 நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும், இயற்கை இடர்பாடுகள் பாதிக்கும் பகுதிகள் வரைபடமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளால் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கு நவீன  உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். 
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால், மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், பி.பெரியபுள்ளான் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அலுவலர்கள் மீது வருவாய் நிர்வாக ஆணையர் அதிருப்தி
பேரிடர்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால் கேள்வி எழுப்பியபோது, அதற்கு எவ்விதப் பதிலும் தெரிவிக்காமல் அலுவலர்கள் அமர்ந்திருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.
பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் மண்டல அலுவலர்களாகவும் அவர்களுக்கு கீழ் ஒருங்கிணைப்பாளர் குழு மற்றும் முதல்நிலை மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பேரிடர் முன்னேற்பாடுகள் தொடர்பாக  ஆய்வுக் கூட்டத்தில் மண்டல அலுவலர்களிடம் வருவாய் நிர்வாக ஆணையர் கேள்வி எழுப்பியபோது, யாரும் பதில் அளிக்கவில்லை. கூட்டத்தில் மண்டல அலுவலர்கள் யாரெல்லாம் இருக்கிறீர்கள் எனக் கேட்ட பிறகும்,  ஓரிருவர் மட்டுமே கைகளை உயர்த்தினர். அதில் மண்டல அலுவலர் ஒருவரிடம்,  பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் எத்தனை என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. அலுவலர்களின் நிலையை ஆட்சியரிடம் சுட்டிக் காட்டி வருவாய் நிர்வாக ஆணையர் அதிருப்தி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com