மதுரையில் சமணர்களின் வாழ்க்கை நெறி கண்காட்சி

மதுரையில் சமணர்களின் வாழ்க்கை நெறிகளை விளக்கும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் சமணர்களின் வாழ்க்கை நெறிகளை விளக்கும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக பாவ மன்னிப்பு தினத்தையொட்டி மதுரை ஜெயின் சமூக சங்கத்தின் சார்பில் சமணர்களின் வாழ்க்கை நெறி கண்காட்சி நடைபெற்றது. மதுரை தெற்காவணி மூலவீதியில் உள்ள ஸ்ரீ ஆராதனா பவனில் முதன்முறையாக நடைபெற்ற கண்காட்சியை தமிழ்நாடு சிறப்புக்காவல்படை ராஜபாளையம் கமாண்டண்ட் ஆர்.ஜெயந்தி, மதுரை தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், செயலர் ஜெகதீசன் ஆகியோர் திறந்து வைத்தனர். 
கண்காட்சியில், சமணர்களின் சிறப்புகள்,  புண்ணிய ஸ்தலங்கள், போதனைகள் பற்றி விளக்கும் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் சமணர்களின் வாழ்வியல் நெறிகளான அகிம்சை, புலால் உண்ணாமை குறித்தும் விளக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சி தொடர்பாக ஜெயின் சங்க நிர்வாகி அசோக்குமார் கூறியது: சமணத்திற்கும் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை மாவட்டத்தில் யானைமலை, அரிட்டாப்பட்டி, நாகமலைபுதுக்கோட்டை ஆகிய இடங்களில் சமணர்கள் வாழ்ந்துள்ளனர். சமணப்பள்ளிகளும் இங்கு இருந்து வந்ததற்கான ஆவணங்கள் உள்ளன. சமணம் முழுவதும் அகிம்சையை மட்டுமே வலியுறுத்துகிறது. மேலும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் வலியுறுத்துகிறது. இந்த கொள்கைகளையே சமண தீர்த்தங்கரர்கள் மக்களுக்கு போதித்தனர். அகிம்சை மட்டுமே உலகத்தை அனைத்து இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகளில் இருந்து காக்கும் என்று போதித்தனர். உலகில் மிகவும் அறிவுள்ளதாக படைக்கப்பட்டுள்ளது மனித இனம் மட்டுமே. இயற்கையை அழிக்காமல், வன விலங்குகளை கொல்லாமல் அகிம்சையை பின்பற்றுவது, கருக்கலைப்பு, புலால் உண்ணாமை, உணவை வீணடிக்காமல் இருப்பது, காடுகளை பாதுகாப்பது உள்ளிட்ட கொள்கைகளை வலியுறுத்தி இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. சமணம் கூறும் ஐவகை கொள்கைகளான அகிம்சை, சத்தியம், திருட்டின்மை, பிரமச்சரியம், ஆசையின்மை ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலமாக வன்முறையற்ற வாழ்க்கையை வாழ முடியும். 
இவற்றை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கண்காட்சியை முதன்முறையாக நடத்தியுள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com