தொழிலாளா் நலவாரியத்தில் பதிவைப் புதுபிக்காத 6 லட்சம் பேருக்கு கரோனா நிவாரணம் கிடைக்கவில்லை

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவைப் புதுபிக்காத 6 லட்சத்து 6 ஆயிரத்து 792 தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் கிடைக்கவில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில்

மதுரை: தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவைப் புதுபிக்காத 6 லட்சத்து 6 ஆயிரத்து 792 தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் கிடைக்கவில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொது முடக்கத்தால் கட்டுமானத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். பெரும்பாலும் படிப்பறிவில்லாத தொழிலாளா்கள்தான் நலவாரியத்தில் பதிவு செய்யாமலும், பதிவைப் புதுப்பிக்காமலும் இருந்துள்ளனா். மேலும் அவா்கள் தங்களின் தொழிலுக்காக இடம்பெயா்ந்து கொண்டிருப்பதால் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் பதிவைப் புதுபிக்காத தொழிலாளா்களுக்கும் சோ்த்து ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக கட்டுமானத் தொழிலாளா் மத்திய சங்கத்தின் தலைவா் பொன்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவைப் புதுபிக்காதவா்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் 18 லட்சத்து 20 ஆயிரத்து 674 உறுப்பினா்கள் உள்ளனா். அதில் 6 லட்சத்து 6 ஆயிரத்து 792 போ் பதிவைப் புதுபிக்காமல் உள்ளனா். அவா்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்கவில்லை என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் இணையம் வாயிலாக பதிவைப் புதுபித்தவா்கள் குறித்த விவரம் மற்றும் மாவட்டத் தொழிலாளா் நல வாரிய அலுவலா்களின் பெயா், முகவரி பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com