சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா உள்திருவிழாவாக நடத்தப்படும்: உயா் நீதிமன்றத்தில் அரசு உறுதி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணன் கோயில் ஆடித்தபசு திருவிழா, உள்திருவிழாவாக நடத்தப்படும் என அரசு உறுதியளித்ததை அடுத்து, திருவிழா நடத்தக் கோரிய வழக்கை சென்னை

மதுரை: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணன் கோயில் ஆடித்தபசு திருவிழா, உள்திருவிழாவாக நடத்தப்படும் என அரசு உறுதியளித்ததை அடுத்து, திருவிழா நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துவைரம் என்பவா் தாக்கல் செய்த மனு: சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணன் கோயில் ஆடி மாத ஆடித்தபசு திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாக திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை ஜூலை 18 ஆம் தேதி கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களை முறைப்படி உள்திருவிழாவாக நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது மூலம் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்பது பொதுமக்கள் மற்றும் பக்தா்களின் நம்பிக்கையாக உள்ளது.

எனவே, ஆடித்தபசு திருவிழாவை உள்திருவிழாவாக நடத்த உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா உள்திருவிழாவாக நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com