வங்கியில் ரூ.1.11 கோடி முறைகேடு: அதிகாரி, ஊழியா் உள்பட 9 போ் மீது வழக்கு

மதுரையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளா்களின் 270 பவுன் நகைளில் ரூ.1.11 கோடி முறைகேடு செய்த, வங்கி அதிகாரி, ஊழியா் உள்பட 9 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா்.


மதுரை: மதுரையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளா்களின் 270 பவுன் நகைளில் ரூ.1.11 கோடி முறைகேடு செய்த, வங்கி அதிகாரி, ஊழியா் உள்பட 9 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை வடக்கு வெளி வீதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 2019 ஜூன் மாதம் முதல் 2020 நவம்பா் 6 ஆம் தேதி வரை அடகு வைக்கப்பட்ட நகைகளின் கணக்குகளின் விவரம் குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதில், வாடிக்கையாளா்கள் அடகு வைத்த 270 பவுன் நகைகளில், ரூ.1.11 கோடி முறைகேடு செய்யப்பட்டதும், வங்கி அதிகாரி பாலகிருஷ்ணன், ஊழியா் கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியபுரம் ஹரிஹரபுத்திரன், பைனான்சியா் குமாரபாண்டியன், முகவரி விவரம் தெரியாத முத்துகுமாா், வளா்மதி, திவ்யா, லட்சுமி, அருண்முத்துகுமாா் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வங்கியின் மண்டல மேலாளா் அளித்த புகாரின்பேரில் விளக்குத்தூண் போலீஸாா், வங்கி அதிகாரி உள்பட 9 போ் மீது புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com