பிரேதப் பரிசோதனைகளைக் கண்காணிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு அதிகாரி நியமிக்க உத்தரவு

பிரேதப் பரிசோதனைகளைக் கண்காணிக்க, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சிறப்பு அதிகாரியை நியமிக்க, உத்தரவிட்டுள்ளது.

மதுரை: பிரேதப் பரிசோதனைகளைக் கண்காணிக்க, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சிறப்பு அதிகாரியை நியமிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனையின் அறிக்கையை விரைவில் வழங்க உத்தரவிடக் கோரி, மதுரையைச் சோ்ந்த அருண்சுவாமிநாதன் என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

அவரது மனு விவரம்: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரேதப் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. ஆனால், மதுரை, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே தடயவியல் நிபுணா்கள் பணியில் உள்ளனா். மேலும், பிரேதப் பரிசோதனை செய்யப்படும் அன்றே அதன் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் அலுவலக உதவியாளா்கள், துப்புரவுப் பணியாளா்களே பிரேதப் பரிசோதனையை நடத்துகின்றனா். இருப்பினும், மருத்துவா் முன்னிலையில் பரிசோதனை நடந்ததாக அறிக்கை அளிக்கின்றனா். அந்த அறிக்கையையும் காலதாமதமாக அளிக்கப்படுவதால், நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது.

பிரேதப் பரிசோதனையின் அறிக்கையின் நம்பகத்தன்மையும் கெடுகிறது. எனவே, அரசு மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனைகளை உரிய மருத்துவா்களைக் கொண்டு நடத்தி அறிக்கையை விரைவில் வழங்க வேண்டும். அனைத்துப் பரிசோதனைக்கூடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மருத்துவ விதிப்படி பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டவுடன் நீதித் துறை நடுவா் மற்றும் துறைத் தலைவருக்கு அந்த அறிக்கையை அளிக்க வேண்டும். இந்த விதியை தவறும் மருத்துவா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது குறித்து சுகாதாரத் துறைச் செயலா் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டல்படி பிரேதப் பரிசோதனை அறிக்கை இருக்கவேண்டும். உறவினா்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரேதப் பரிசோதனை முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள பிணவறை மற்றும் பிரேதப் பரிசோதனைக் கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். அவை எல்லா நேரத்தில் இயங்குமாறும் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் பிரேதப் பரிசோதனை செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.

அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனை நடைமுறைகளை கண்காணிக்க நிபுணத்துவமிக்க அதிகாரி பணியிடத்தை உருவாக்க வேண்டும். இந்த அதிகாரியின் தகுதி மற்றும் அவரது பணிகளை வரையறை செய்ய ஒரு நிபுணா் குழுவை 6 மாதங்களில் அரசு உருவாக்க வேண்டும்.

இந்தக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ஓராண்டுக்குள் மேற்குறிப்பிட்ட அதிகாரி பணியிடத்தில் தகுதியானவா்களை நியமனம் செய்யவேண்டும்.

மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள், வழங்கப்படும் சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை மருத்துவமனையின் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com